மாவட்ட திட்டப்பணி செயல்பாட்டினை மத்திய அரசு அதிகாரி கண்காணிக்கும் புதிய அணுகுமுறை

மாவட்ட திட்டப்பணி செயல்பாட்டினை மத்திய அரசு அதிகாரி கண்காணிக்கும் புதிய அணுகுமுறை உரிய பலன் தருமா?

Update: 2017-12-06 21:15 GMT
விருதுநகர்,

வழக்கமான நடைமுறையில் மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் கல்வி, விவசாயம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இத்துறைச்சார்ந்த திட்டங்களை அமல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த திட்டப்பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாநில அரசின் முதன்மை செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி நியமிக்க்கபடுவதன் பேரில் அவர் அவ்வப்போது ஆய்வு நடத்தி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து கலெக்டர் மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் கலந்தாய்வு செய்வார்.

மேலும் திட்டப்பணிகளில் தொய்வு ஏதும் இருந்தால் அந்த பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என அறிவுறுத்துவார். விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் வீட்டு வசதித்துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

தமிழகத்தில் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பு ஏற்றவுடன் அவர் கோவை மாவட்டத்தில் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டதுடன் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த புதிய அணுகுமுறைக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்த நிலையில் எதிர்க்கட்சிகள், கவர்னரின் இந்த அணுகுமுறையை விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் தற்போது மத்திய அரசு, மாவட்ட அளவிலும் திட்டப்பணிகளை கண்காணிக்க மத்திய அரசு அதிகாரிகளை நியமித்துள்ளது. அடிப்படையில் பின்தங்கிய மாவட்டங்களை முன்னோடி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பின்தங்கிய மாவட்டங்களாக 115 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு இந்த மாவட்டங்களில் திட்ட செயல்பாடுகளை கண்காணிக்க மத்திய அரசில் கூடுதல் செயலாளராக பணியாற்றும் பிரவீன்குமார் மற்றும் இணை செயலாளராக பணியாற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை நியமித்துள்ளது. இவர்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற மாநில அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான சந்தோஷ்பாபு, அமுதா ஆகியோரை நியமித்துள்ளது.

மத்திய அரசு அதிகாரி பிரவீன்குமார் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார். மத்திய அரசின் நிதி ஆயோக் குழுவின் அறிவுரைப்படி இந்த கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய பிரவீன்குமார், 5 ஆண்டுகளில் இந்தமாவட்டத்தை முற்றிலும் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாற்றுவதுதான் இந்த புதிய அணுகுமுறையின் நோக்கம் என்றும், இதற்கான ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு அதன்அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில கண்காணிப்பு அதிகாரி சந்தோஷ்பாபுவும் கலந்து கொண்டார். அவரும் அரசின் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பது உள்ள இடைவெளியே கண்டறிந்து அது தொடர்பான விவரங்களை சேகரித்து நலத்திட்டங்கள் முழுமையாக சென்று சேருவதற்கு வழி வகை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மாநில நிர்வாகம் ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அத்திட்டப்பணிகளை செயல்படுத்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் பல்வேறு அரசு துறைகள் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றை முடுக்கி விடுவது வாடிக்கையாக உள்ளது. இதுவரை இந்த நடைமுறை தான் செயல்பாட்டில் இருந்து வருகிறது. கிராம பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூட மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டினை வழங்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தான் செயல்பட்டு வருகிறது. அனால் திடீரென மத்திய அரசு பின் தங்கிய மாவட்டங்கள் என்ற காரணத்தை கூறி தனது கட்டுப்பாட்டில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நேரடியாக நியமித்துள்ளது ஏன் என்று தெரியவில்லை.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசின் திட்டங்களை மட்டும் செயல்படுத்தினால் மட்டும் அந்த மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்றிவிட முடியாது. மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு மாநில அரசு தான் பெரும் அளவு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

அவ்வாறு இருக்கையில் பிரதமரின் 2022–ம் ஆண்டு தொலைநோக்கு திட்டத்தின் கீழ் இந்த புதிய அணுகுமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தாலும் மத்திய, மாநில அரசுகள் திட்டப்பணிகள் யாவும் ஒருங்கிணைந்து செயல்படுத்தினால் தான் மாவட்டம் முன்னோடி மாவட்டமாக வளர்ச்சி அடைய உதவும். இந்த நிலையில் மாநில அரசின் திட்டங்களை மத்திய அரசு அதிகாரி நேரடியாக கண்காணிப்பது என்பது எந்த அளவுக்கு பலன் தரும் என்பது காலப்போக்கில் தான் தெரியவரும் என மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மத்திய அரசின் இந்த நடைமுறை மாநில அரசின் அதிகார வரம்பில் தலையிடுவது தான் என சமூக ஆர்வலர் ஒருவர் கருத்து தெரிவித்தார். எது எப்படி ஆயினும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு விருதுநகர் மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இம்மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்