கணவன்–மனைவியை சுட்டுக்கொன்ற வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தேவையில்லை
கணவன்–மனைவியை சுட்டுக்கொன்ற வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தேவையில்லை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.
மதுரை,
நாகர்கோவில் மேலபுத்தேரி பகுதியைச் சேர்ந்த குமாரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
எனது மகளான யோகேஸ்வரியின் கணவர் ஆறுமுகம் வனத்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் 10–ந்தேதி தேரூரில் எனது மகள், மருமகனை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவர் தெரிவித்த தகவல்கள் குறித்து மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை.
இதனையடுத்து நீதிபதி, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தேவையில்லை. 6 மாதத்தில் வழக்கின் குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.