மகளை கற்பழித்த தந்தைக்கு 46 ஆண்டு சிறை திருச்சி மகிளா கோர்ட்டு அதிரடி உத்தரவு

மகளை கற்பழித்த தந்தைக்கு 46½ ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டு உத்தரவிடப்பட்டது.

Update: 2017-12-06 23:15 GMT
திருச்சி,

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள மேலவிலாங்குளம் அரசங்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 48). கூலி தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 2 ஆண், 2 பெண் குழந்தைகள் என 4 பேர் உள்ளனர். இவர்களது 14 வயது மகள் கடந்த 2013-ம் ஆண்டில் அங்கு உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். தற்போது 11-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

இந்த நிலையில் மகள் என்றும் பாராமல் காமராஜ் கடந்த 2013-ம் ஆண்டு சிறுமியை மிரட்டி கற்பழித்து உள்ளார். அதோடு யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி தந்தை செய்யும் செயலை தாய் உள்பட மற்ற யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு காமராஜ் தன் மகளை பல முறை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கற்பழித்து உள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தாள். மகளுக்கு வயிற்றுப்பகுதி பெரிதாக இருப்பதை பார்த்த தாய் இது குறித்து கேட்டு உள்ளார்.

அப்போது தந்தை கற்பழித்ததை கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பதறி அடித்துக்கொண்டு மகளை அங்கு உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தார். அப்போது சிறுமி கர்ப்பம் ஆகி இருப்பது உறுதி படுத்தப்பட்டது.

இது குறித்து பழனியம்மாள், தனது கணவர் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 31.12.2014 அன்று திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த நிலையில் கர்ப்பம் தறித்து இருந்த சிறுமிக்கு திண்டுக்கல்லில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை அங்கு உள்ள ஒரு இல்லத்தில் தத்து கொடுத்தனர். தத்து கொடுத்த 3 மாதத்தில் அந்த குழந்தை இறந்து விட்டது. இறந்து குழந்தையின் பிணம் அங்கு உள்ள அனாதை இல்லம் அருகே புதைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக பிறந்த குழந்தையின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டு உடல் கூறு பரிசோதனை செய்யப்பட்டது. அதிலும் சிறுமியை காமராஜ் கற்பழித்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த திருச்சி மகளிர் கோர்ட்டு நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின், குற்றவாளி காமராஜுக்கு பாலியல் குற்றத்தில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 3 ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். அதாவது சிறுமியை பயமுறுத்தி கற்பழித்ததற்கு ஒரு ஆயுள் தண்டனையும், கற்பழித்து கர்ப்பம் ஆக்கிய குற்றத்திற்கு 1 ஆயுள் தண்டனையும், ரத்த உறவு கொண்ட மகளையே கற்பழித்ததற்காக ஒரு ஆயுள் தண்டனையும் என 3 ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். ஒவ்வொரு ஆயுள் தண்டனையும் தனித்தனியே அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி உள்ளார்.

அதே போன்று சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்கு 1 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், இந்த குற்றங் களுக்கெல்லாம் அபராதமாக ரூ.3,500 கட்ட வேண்டும். கட்டத்தவறினால் மேலும் 3½ ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

“குற்றவாளி அபராதம் கட்ட முடியாத நிலை உள்ளது. இதனால் ஆயுள் தண்டனைக்கு தலா 14 ஆண்டுகள் மூலம் 3 ஆயுள் தண்டனைக்கு 42 ஆண்டும், கொலை மிரட்டலுக்கு 1 ஆண்டும், அபராதம் கட்டாததற்கு 3½ ஆண்டும் என மொத்தம் 46½ ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

தமிழகத்திலேயே ஒரே வழக்கில் குற்றவாளிக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது இது தான் முதல் முறை” என்று இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணவேணி தாமரைசெல்வன் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்