இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: தாய் – மகனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக தாய் மற்றும் மகனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து ராமநாதபுரம் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள செங்கப்படை பகுதியை சேர்ந்தவர் நீலமேகம். இவருடைய மனைவி ஆறுமுகம் (வயது 58). இவர்களுடைய மகன் முத்துராமலிங்கம் என்பவருக்கும், முதுகுளத்தூர் அருகே உள்ள தெய்வதானம் பகுதியை சேர்ந்த சாமூண்டீசுவரி(20) என்பவருக்கும் கடந்த 2012–ம் ஆண்டு ஜூன் 29–ந்தேதி திருமணம் நடந்தது.
திருமணத்திற்குபின் முத்துராமலிங்கம் வெளிநாடு சென்றுவிட்டாராம். இந்தநிலையில் சாமூண்டீசுவரியை மாமியார் ஆறுமுகம் கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு வெளிநாட்டில் இருந்த கணவன் முத்துராமலிங்கமும் உடந்தையாக இருந்தாராம். இதனால் கொடுமை தாங்க முடியாமல் சாமூண்டீசுவரி பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். பின்னர் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததும் முத்துராமலிங்கம் மற்றும் ஆறுமுகம் தரப்பினர் சமாதானம் பேசி சாமூண்டீசுவரியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
கடந்த 2013–ம் ஆண்டு ஏப்ரல் 4–ந்தேதி மீண்டும் கொடுமைப்படுத்தியதால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சாமூண்டீசுவரி உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சிக்கல் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக ஆறுமுகம் மற்றும் அவருடைய மகன் முத்துராமலிங்கத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கயல்விழி, இளம்பெண் சாமூண்டீசுவரியை தற்கொலைக்கு தூண்டிய மாமியார் ஆறுமுகம், கணவன் முத்துராமலிங்கம் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனையும், ரூ.25,000 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.