திருவல்லிக்கேணியில் வாலிபர் கல்லால் அடித்து கொலை ஓட ஓட விரட்டி தாக்கிய 4 பேர் கைது
சென்னை திருவல்லிக்கேணியில் வாலிபரை ஓட ஓட விரட்டி கல்லால் தாக்கி கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் கெனால் ரோட்டைச் சேர்ந்தவர் பல்பு குமார் (வயது 32). கஞ்சா பழக்கம், வழிப்பறி, திருட்டு போன்ற தொழில்களால் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சொறி விஜய் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
இருவரும் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள். திருட்டு மற்றும் வழிப்பறி தொழில் போட்டியில் பகைவர்களாக மாறினார்கள். இந்தப்பகையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பல்பு குமாரை கொலை செய்ய முயற்சி நடந்தது. அவரது கழுத்தை அறுத்து தீர்த்துக்கட்ட முயன்றனர். அப்போது உயிர்தப்பிய பல்பு குமார் தனது தாயார் மற்றும் குடும்பத்தினருடன் பட்டினப்பாக்கத்திற்கு இருப்பிடத்தை மாற்றினார்.
அடித்து கொலை
பல்பு குமார் இருப்பிடத்தை மாற்றினாலும் தான் பிறந்து வளர்ந்த இடமான மாட்டாங்குப்பம் கெனால் ரோடு பகுதிக்கு அடிக்கடி வந்து செல்வார். கொலை முயற்சி வழக்கு ஒன்றில் குண்டர் சட்டத்தில் சிறைக்குச் சென்ற பல்பு குமார் சமீபத்தில் விடுதலையாகி வெளியே வந்தார்.
விடுதலையாகி வந்தபிறகு முதல்முறையாக நேற்று முன்தினம் இரவு மாட்டாங்குப்பம் கெனால் ரோடு பகுதிக்கு வந்தார். அப்போது அவரோடு ஏற்கனவே முன்பகையில் இருந்த சொறி விஜயின் தம்பி அரி மற்றும் பிரவீன் என்ற கைப்புள்ள, பிரசாந்த், கலைமணி, சுரேஷ் ஆகியோர் கும்பலாக வந்து பல்பு குமாரை தாக்கினார்கள்.
உயிர் பிழைப்பதற்காக பல்பு குமார் தப்பி ஓடினார். அவரை பின்தொடர்ந்து ஓட ஓட விரட்டினார்கள். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை, விரட்டிச் சென்றவர்கள் தொடர்ந்து கொடூரமாக தாக்கினர். திடீரென்று பெரிய கல் ஒன்றை அவரது தலையில் போட்டுவிட்டனர். தலை நசுங்கியதால் பல்பு குமார் துடிதுடிக்க அதே இடத்தில் பரிதாபமாக இறந்துபோனார். அவரை தீர்த்துக்கட்டியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
4 பேர் கைது
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பர்வேஸ்குமார் உத்தரவின்பேரில் திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம், அண்ணாசதுக்கம் இன்ஸ்பெக்டர் சபாபதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
கொலை செய்யப்பட்ட பல்பு குமாரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. உடனடியாக கொலையாளிகளை பிடிக்கும் வேட்டையில் போலீசார் இறங்கினார்கள். கொலையாளிகள் அரி, பிரவீன் என்ற கைப்புள்ள, பிரசாந்த், கலைமணி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சுரேஷ் என்பவரை தேடி வருவதாகவும் போலீசார் நேற்று தெரிவித்தனர்.