வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை, பணம் திருட்டு
கும்மிடிப்பூண்டியில் தனியார் வாகன விற்பனை கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
செங்குன்றம்,
கும்மிடிப்பூண்டி பஜாரில் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவர் தட்சிணாமூர்த்தி (வயது 44). இவரது வீடு, கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையையொட்டி உள்ள பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, மாடியில் உள்ள தனது வீட்டை பூட்டி விட்டு அதன் கீழே உள்ள தனது தாயார் விக்டா வீட்டில் தட்சிணாமூர்த்தி தனது குடும்பத்தினரோடு படுத்து தூங்கினார்.
நேற்று காலை தட்சிணாமூர்த்தியின் மனைவி சரஸ்வதி (39) மாடியில் உள்ள வீட்டுக்கு சென்றார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
நகை- பணம் திருட்டு
நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கு 2 தனியறைகளில் இருந்த 2 பீரோக்களையும் உடைத்து அதில் இருந்த 50 பவுன் நகை, ¼ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். தட்சிணாமூர்த்தியின் வீட்டு வாசலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்கள் குறித்த முக்கிய தடயங்கள் ஏதேனும் பதிவாகி உள்ளதா? என கண்டறியும் வகையில் போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.
2 தனிப்படைகள்
கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் முக்கிய தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டது. ஆனால் துப்பு எதுவும் துலங்கவில்லை.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக துப்பு துலக்க கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, நாராயணமூர்த்தி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த துணிகர திருட்டு சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.