27 கண் மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்து செல்லும் தண்ணீர் விவசாயிகள் மகிழ்ச்சி

காவேரிப்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதையடுத்து 27 கண் மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இந்த தண்ணீர் மூலம் 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2017-12-05 22:03 GMT
பனப்பாக்கம்,

வறண்ட மாவட்டமான வேலூருக்கு வற்றாத ஏரியாக இருப்பது காவேரிப்பாக்கம் ஏரியாகும். 3 ஆயிரத்து 968 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் கோடைகாலத்தில் கூட தண்ணீர் இருக்கும். ஏரி நிரம்பினால் 6 ஆயிரத்து 278 ஏக்கர் நிலங்கள் 3 போகமும் பாசன வசதி பெறும். கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் இந்த ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது.

இதனை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வந்தனர். அணையில் 30.65 அடி தண்ணீர் திறக்கலாம் என்றாலும் 28 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கினாலே பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த ஏரிக்கு தற்போது 400 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் நேற்று காலை 28.6 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி கடல்போல் காட்சியளிக்கிறது.

இதனையடுத்து உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் நேற்று காலை 10 மணிக்கு 27 கண் மதகுகள் வழியாக பொதுப்பணித்துறையினர் தண்ணீரை திறந்து விட்டனர். நிகழ்ச்சியில் நெமிலி தாசில்தார் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் சந்திரா, கிராம நிர்வாக அலுவலர் ராமு, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தற்போது திறக்கப்பட்ட தண்ணீர் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தக்கோலம் ஏரிக்கு செல்கிறது. அதன் மூலம் தக்கோலம் ஏரி நிரம்பினால் அங்கிருந்து அயனபுரம், கல்பலாம்பட்டு, துறையூர், உலியநல்லூர், தென்மாம்பாக்கம், தென்னல், கீழ் வெண்பாக்கம், மேல்வெண்பாக்கம், எஸ்.கொளத்தூர், சேந்தமங்கலம், கணபதிபுரம் ஆகிய 11 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும்.

ஏற்கனவே திறந்து விடப்பட்ட தண்ணீர் மகேந்திரவாடி ஏரிக்கு சென்று வருகிறது. இதனால் அந்த ஏரி 60 சதவீதம் நிரம்பியுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் இன்னும் 10 நாட்களில் நிரம்ப வாய்ப்புள்ளது. இந்த ஏரி நிரம்பினால் காட்டுப்பாக்கம், பாலகிருஷ்ணாபுரம், வெளிதாங்கிபுரம், அசநெல்லிகுப்பம், மேலேரி உள்ளிட்ட 10 ஏரிகள் நிரம்ப உள்ளன.

இந்த ஆண்டு காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பியதன் மூலம் பாசனம் பெறும் 6 ஆயிரத்து 278 ஏக்கர் மட்டுமல்லாது தற்போது வெளியேறும் தண்ணீரால் பல ஏரிகள் நிரம்பி பல்லாயிரக்கணக் கான ஏக்கர் விவசாய நிலங்கள் முப்போக சாகுபடி பெற வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்