சேலத்தில் பரபரப்பு கல்லால் தாக்கி முதியவர் கொன்று புதைப்பு

சேலத்தில் கல்லால் தாக்கி முதியவர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மகள் உள்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-12-05 23:15 GMT
சேலம்,

சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 95). இவருடைய மகள் கமலா (50). இவர் அந்த பகுதியில் உள்ள மஞ்சள் குடோனில் வேலை செய்து வருகிறார். வயது முதிர்வு அடைந்ததால் பழனிசாமியை பராமரிப்பது கமலாவுக்கு சிரமமாக இருந்து வந்தது.

கமலா வேலை பார்க்கும் இடத்திற்கு பழனிசாமி சென்று வருவது வழக்கம். ஆனால் அவர் வேலை செய்யும் இடத்திற்கு பழனிசாமி வருவது கமலாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் தந்தை, மகளுக்கிடையே கருத்துவேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த சண்முகம், அங்கம்மாள் காலனியில் உள்ள மாணிக்கம் தெருவில் ஒரு மில்லில் வேலை செய்து வந்தார்.

சண்முகம் வேலை பார்க்கும் மில் அருகே ஒரு சுகாதார வளாகம் உள்ளது. இந்த கட்டிடத்தின் உள்ளே பழனிசாமி அவ்வப்போது தங்குவது வழக்கம். பழனிசாமியை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக கமலா அங்கு வந்து செல்வார். அப்போது கமலாவுக்கும், சண்முகத்திற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சண்முகத்திடம், பழனிசாமி தனக்கு தொல்லை கொடுத்து வருவதாக கமலா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிசாமி மாயமானார். இது தொடர்பாக பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று சுகாதார வளாகத்திற்கு சென்றார். அங்கு உடல் புதைந்தநிலையில் ஒருவரின் கை மட்டும் மண்ணிற்கு மேலே தெரிந்தது.

இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், கை தெரிந்த இருந்தது பழனிசாமி என்பதும், அவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு குழி தோண்டி புதைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. பழனிசாமி உடலை இன்று (புதன்கிழமை) தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பழனிசாமி கொலை தொடர்பாக சண்முகம், கமலா ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பழனிசாமியை கொலை செய்தவர்கள் யார்? இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் கல்லால் தாக்கி முதியவர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்