லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிக்கு 21 மாதம் சிறை

ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிக்கு 21 மாதம் சிறைத் தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2017-12-05 23:00 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த குமங்கலம் பார்த்தசாரதி கோவில்தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 42). இவர், பொன்னேரியில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் தனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து கடந்த 2006–ம் ஆண்டு ரூபாய் 20 ஆயிரம் கடன் பெற்றார்.

அதற்கு அவர் சரியான முறையில் மாதாமாதம் செலுத்த வேண்டிய தவணைத் தொகையை செலுத்தாமல் இருந்துள்ளார். பின்னர் கடந்த 2008–ம் ஆண்டு, தான் செலுத்த வேண்டிய ரூ.20 ஆயிரம் கடனுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.67 ஆயிரத்தை பொன்னேரியில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் அவர் செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து புவனேஸ்வரி தன் வீட்டு பத்திரத்தை வாங்குவதற்காக சென்றபோது அங்கிருந்த செயலாளரான சுந்தர்ராமன், அடமானம் வைத்த வீட்டு பத்திரத்தை தரவேண்டுமானால் தனக்கு ரூ.14 ஆயிரம் தரவேண்டும் என லஞ்சம் கேட்டுள்ளார். மேலும் அதில் முதல் தவணையாக ரூ.4 ஆயிரத்தை தருமாறு கேட்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத புவனேஸ்வரி இதுபற்றி சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் 19–6–2009 அன்று லஞ்சப்பணம் ரூ.4 ஆயிரம் வாங்க முயன்ற கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் செயலாளர் சுந்தர்ராமனை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை திருவள்ளூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சுந்தர்ராமனுக்கு 21 மாத சிறைத் தண்டணையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறைத் தண்டணை அனுபவிக்கவேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக அமுதா வாதாடினார்.

கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் செயலாளராக பணியாற்றிய அதிகாரி சுந்தர்ராமன் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்