டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு

கொத்தமங்கலம் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2017-12-05 22:45 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொத்தமங்கலம் பகுதியில் டாஸ்மாக் கடை நடத்தக்கூடாது எனக்கூறி, நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தோம். இதைத்தொடர்ந்து அனைத்துத்துறை அதிகாரிகள் பலர் ஊர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடினார்கள். இந்த நிலையில் தற்போது எங்கள் பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரியவந்து உள்ளது. எங்கள் பகுதியில் 2 மேல்நிலைப்பள்ளிகளும் 8 தொடக்கப்பள்ளிகளும் உள்ளன.

அனுமதிக்க கூடாது

எங்கள் பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் இரவு நேரங்களில் சிலர் மது அருந்துவது உள்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி அளிக்கக்கூடாது என கூறியிருந்தனர். 

மேலும் செய்திகள்