திருப்புவனம் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் சிக்கினர்

திருப்புவனம் அருகே டாஸ்மாக் கடையில் புகுந்து பணம், மதுபாட்டில்கள் கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-12-05 22:00 GMT

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது சாய்னாபுரம். இங்கு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் கடையில் இருந்த பணம், மதுபாட்டில்களை திருடிச்சென்றனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1¾ லட்சம். இதுகுறித்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் கொடுத்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்யைடித்த மர்மநபர்களை தேடி வந்தனர்.

இதற்கிடையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் இந்த வழக்கு தொடர்பான மர்மநபர்களை பிடிக்க, திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம், சப்–இன்ஸ்பெக்டர் வாசிவம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அதன்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் மதுரை மாவட்டம் பனையூரை சேர்ந்த குரங்குசிவா, அருள்குமார் மற்றும் திருப்புவனத்தை அடுத்த சொட்டதட்டி கிராமத்தை சேர்ந்த அஜீத்குமார் ஆகிய 3 பேர் சேர்ந்து சாய்னாபுரம் டாஸ்மாக் கடையில் திருடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து குரங்குசிவா, அருள்குமார், அஜீத்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.60 ஆயிரம் மற்றும் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்