கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டம்
உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை வாபஸ் பெறக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
திருச்சி,
திருச்சி அருகே உள்ள அரசு உதவி பெரும் கல்லூரி ஒன்றில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் அதை ரத்து செய்யக்கோரி நேற்று சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் பலர் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். முன்னதாக அவர்கள் கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாசலில் இருந்து பல்வேறு கோஷங்களுடன் ஊர்வலமாக சென்று கலெக்டர் கார் நிறுத்தும் இடம் அருகே அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை குறித்து மனு கொடுக்க மாணவர்கள் 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர் என்று கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்தனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறும்போது, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கல்லூரி நிர்வாகத்தினர் அதிகம் வசூல் செய்கின்றனர். இது குறித்து கேட்டால் ஜி.எஸ்.டி.வரி என்றும் மேலும் தண்ணீர் வரி ஏறி விட்டது, மின்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதனால் தான் அதிக கட்டணம் வசூல் செய்கிறோம் என்று கூறுகின்றனர்.
இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனவே உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை மட்டுமே மாணவர்களிடம் இருந்து பெற வேண்டும். எங்கள் கோரிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்றனர். பின்னர் மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.