புதிதாக 72 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
கர்நாடகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 72 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் பெங்களூருவில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளோம். இதில் வாக்காளர்கள் தங்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் சரியாக உள்ளதா? என்பதை பார்த்து சரிசெய்து கொள்ளலாம். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் நகரசபைகள், பஞ்சாயத்துகள், பட்டண பஞ்சாயத்து, புறசபைகளில் கிடைக்கும். நாளை(புதன்கிழமை) முதல் 21–ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் ஆய்வு பணி நடைபெறும்.
வருகிற 17–ந் தேதி வரை வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிய மனுக்கள் பெறப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் பணியை வருகிற 29–ந் தேதி வரை மேற்கொள்ளலாம். வருகிற 14–ந் தேதி முதல் வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் பணி நடைபெறும். இந்த பணி வருகிற 29–ந் தேதி வரை நடத்தப்படும்.
அடுத்த ஆண்டு(2018) பிப்ரவரி 15–ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அரசியல் கட்சிகள் வாக்குச்சாவடி ஏஜெண்டுகளை நியமிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலின் தரத்தை ஆய்வு செய்ய அவர்கள் ஒத்துழைக்க வேண்டும். தகுதியான வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் விடுபட்டு இருந்தாலோ, இறந்தவர்கள் மற்றும் தகுதி இல்லாதவர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்று இருந்தாலோ அது தொடர்பான விவரங்களை வாக்காளர் பதிவு அதிகாரியிடம் தெரிவிக்கலாம்.
பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் ஆகிய பணிக்கு விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் கிடைக்கும். இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கும் செய்து கொள்ளலாம். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் ceokarnataka.kar.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் 2013–ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தபோது 4 கோடியே 18 லட்சத்து 38 ஆயிரத்து 541 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 4 கோடியே 90 லட்சத்து 6 ஆயிரத்து 901 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 2 கோடியே 48 லட்சத்து 67 ஆயிரத்து 756 பேரும், பெண்கள் 2 கோடியே 41 லட்சத்து 34 ஆயிரத்து 805 பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் அதாவது திருநங்கைகள் 4 ஆயிரத்து 340 பேர் உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக 72 லட்சம் வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர். பெங்களூரு நகரை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 85 லட்சத்து 88 ஆயிரத்து 762 வாக்காளர்களில் ஆண்கள் 45 லட்சத்து 2 ஆயிரத்து 576 பேரும், பெண்கள் 40 லட்சத்து 84 ஆயிரத்து 802 பேரும், திருநங்கைகள் 1,384 பேரும் உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியலில் 18 மற்றும் 19 வயது உடைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் 7 லட்சத்து 69 ஆயிரத்து 472 பேர் இடம் பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு சஞ்சீவ்குமார் கூறினார்.