துறைமுக வழித்தடத்தில் தண்டவாளத்தில் கிடந்த இரும்பு கம்பிகள் மின்சார ரெயில் தப்பியது

துறைமுக வழித்தடத்தில் தண்டவாளத்தில் இரும்பு கம்பிகள் கிடந்தன. மோட்டார்மேன் கவனித்து நிறுத்தியதால் அந்த வழியாக வந்த மின்சார ரெயில் விபத்தில் இருந்து தப்பியது.

Update: 2017-12-04 22:44 GMT

மும்பை,

மும்பை துறைமுக வழித்தடத்தில் நேற்று காலை 7.30 மணியளவில் மின்சார ரெயில் ஒன்று பன்வெலில் இருந்து சி.எஸ்.எம்.டி. நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் மஸ்ஜித்பந்தர் ரெயில் நிலையம் அருகே வந்தபோது, தண்டவாளத்தின் குறுக்கே இரண்டு இரும்பு கம்பிகள் கிடந்தன. இதை கவனித்த அந்த மின்சார ரெயிலின் மோட்டார்மேன் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

இதன் காரணமாக அந்த ரெயில் விபத்தில் இருந்து தப்பியது. இதுபற்றி மோட்டார்மேன் கார்டுக்கு தகவல் கொடுத்தார்.

அவர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே ஊழியர்கள் அந்த இரும்பு கம்பிகளை அப்புறப்படுத்தினார்கள்.

அந்த கம்பிகள் தண்டவாள பராமரிப்பு பணிக்கு பயன்படுத்தப்படுபவை என்பதால் அங்கு பணியில் இருந்த ரெயில்வே ஊழியர்கள் அந்த கம்பிகளை மறதியாக தண்டவாளத்திலேயே விட்டு சென்றிருக்கலாம் என ரெயில்வே போலீசார் கருதுகின்றனர்.

அதே நேரத்தில் ரெயில்வே பொருட்களை திருடும் ஆசாமிகள் கூட தண்டவாளத்தில் அவற்றை போட்டு சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும் அவற்றை அங்கு போட்டு சென்றவர்கள் யார்? என்பதை கண்டறிய ரெயில்வே போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சியை பார்வையிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் நாசவேலைக்காக அந்த கம்பிகள் தண்டவாளத்தில் போடப்பட்டதா? எனவும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்