கூடுவாஞ்சேரி அருகே, வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு ஒருவர் காயம்

கூடுவாஞ்சேரி அருகே தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வீசிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதில் ஒருவர் காயம் அடைந்தார்.

Update: 2017-12-04 23:15 GMT

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் தர்காஸ் பகுதியை சேர்ந்தவர் கே.எஸ்.ரவி(வயது 48). காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தி.மு.க. துணை செயலாளரான இவர், பெருமாட்டுநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராவார்.

நேற்று மாலை 5.10 மணி அளவில் ரவி வீட்டு வாசலில் அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், அவரது உறவினர்களிடம் ரவி வீட்டில் இல்லையா? என்று கேட்டனர். அவர் வீட்டில் இல்லை, வெளியே சென்று உள்ளார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து அந்த மர்ம கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடி குண்டை ரவி வீட்டின் மீது வீசினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டு வாசலை வீட்டு தூரமாக ஓடினார்கள்.

வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டில் உள்ள அவரது அண்ணன் கே.எஸ்.குமார் வெளியே வந்து பார்த்த போது, அடுத்தடுத்து மேலும் 2 வெடிகுண்டுகள் என் மொத்தம் 3 நாட்டு வெடிகுண்டுகளை மர்ம கும்பல் வீசிவிட்டு அங்கிருந்து காரில் தப்பிச்சென்று விட்டனர்.

இதில் ரவியின் அண்ணன் குமாரின் காலில் சிறிய காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

நாட்டு வெடிகுண்டுகளை மர்ம நபர்கள் வீசும் போது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, வீட்டில் இல்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குருசாமி, கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயம் அடைந்த ரவியின் அண்ணன் மற்றும் ரவியின் மனைவி உள்பட உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவரது வீட்டு வாசலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசும் காட்சியும், வெடிகுண்டு வெடிக்கும் காட்சியும் தெளிவாக பதிவாகி உள்ளது.

இதனை வைத்து குற்றவாளிகளை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெருமாட்டுநல்லூர், தர்காஸ் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.எஸ்.ரவி நிருபர்களிடம் கூறியதாவது:–

எனக்கு தொடர்ந்து மிரட்டல் வந்த காரணத்தால் நான் துப்பாக்கி உரிமம் கேட்டேன். ஆனால் எனக்கு போலீஸ் உரிமம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக துப்பாக்கி ஏந்திய போலீசார் சில நாட்கள் எங்கள் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். சில வாரங்களுக்கு பிறகு அந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

எனக்கு தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு ஆணை வழங்கியது. ஆனால் இதுநாள் வரை எனக்கு போலீசார் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை.

எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகிறது. உடனடியாக போலீஸ் உயர் அதிகாரிகள் எனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்