திசையன்விளை அருகே மின்சாரம் தாக்கி 3–ம் வகுப்பு மாணவன் சாவு
திசையன்விளை அருகே மின்சாரம் தாக்கி 3–ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
திசையன்விளை,
திசையன்விளை அருகே உள்ள செம்பொன்விளையை சேர்ந்தவர் பட்டுராஜா. இவருடைய மகன் வருண் (வயது 8). இவன் மரக்கட்டுவிளையில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மதியம் பள்ளிக்கூடத்தில் மதிய உணவு இடைவேளை விடப்பட்டபோது பள்ளி வளாகத்துக்குள் அறுந்து கிடந்த மின்சார ஒயரை வருண் தொட்டதாக தெரிகிறது. அப்போது மின்சாரம் தாக்கி வருண் தூக்கி வீசப்பட்டான்.
உடனே அவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, நவ்வலடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி வருண் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சாரம் தாக்கி பலியான வருணின் உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ராதாபுரம் தாசில்தார் ரவிக்குமார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினார். மின்சாரம் தாக்கி 3–ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.