கோவிலில் கருவறையை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் போராட்டம்; அர்ஜூன் சம்பத்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கருவறையை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் பிரார்த்தனை போராட்டம் நடத்தப்படும் என சேலத்தில் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
சேலம்,
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி கோவிலின் கருவறை இடித்து அகற்றப்பட்டு, சாமி சிலையும் அங்கிருந்து அகற்றப்பட்டது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று மாலை இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத், கோவிலில் கருவறை இடித்து அகற்றப்பட்ட இடத்தை பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:–
கோட்டை மாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. கோவில் திருப்பணியின் போது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு கோர்ட்டின் உத்தரவை மீறி கருவறை இடித்து அகற்றப்பட்டுள்ளது. இது பக்தர்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளது.
இது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் சட்டவிரோதமான செயலாகும். கருவறை அம்மன் சிலை, அதில் இருந்து எடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த பொருட்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இது தொடர்பாக சேலத்தில் விரைவில் பிரார்த்தனை போராட்டம் நடத்தப்படும்.
கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்துள்ள வைக்கம் பகுதியை சேர்ந்த ஹாதியா, சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஹோமியோபதி படிப்பை தொடங்கியுள்ளார்.
மதானி சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது போல், ஹாதியாவை கேரளாவிற்கு மாற்ற தமிழக அரசு, தேசிய புலனாய்வு அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக எங்கள் கட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக முதல்–அமைச்சரிடம் மனு கொடுக்கப்படும். தீவிரவாத அமைப்பின் அச்சுறுத்தலால் தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.