பட்டைநாமம் போட்டு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டத்தலைவர் முரளி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை, மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நெற்றில் பட்டைநாமம் போட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கோதண்டபாணி, சாலை பணியாளர் சங்க மாநில துணை தலைவர் கோதண்டபாணி, மருந்தாளுனர் சங்க மாவட்ட செயலாளர் பிரபாகரன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.