தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-12-04 21:30 GMT

தஞ்சாவூர்,

தஞ்சை புதிய கலெக்டர் அலுவலகம் முன்பு தஞ்சை மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இளங்கோ தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிவப்பிரியா முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் புதிய உரிமைகள் சட்டப்படி மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளிலும் இந்த ஆண்டு தரப்பட்டிருக்க வேண்டிய 5 சதவீத இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு பல கல்வி நிலையங்களில் தரப்படவில்லை. இதனை உடனடியாக வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 300–க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் காத்துக்கிடக்கின்றனர். அவர்களுக்கு பணி வழங்க வேண்டும்.

2 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளை காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வந்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற 2008–ம் ஆண்டின் தமிழக அரசாணையை எந்த துறையிலும் அமல்படுத்தப்படாமல் உள்ளது. இதை உடனே அமல்படுத்திட வேண்டும். கிராமப்புற ஊரக 100 நாள் வேலை திட்டத்தில் சட்டவிதிகளுக்கு புறம்பாக பலமுறையற்ற காரணங்களை சொல்லி மாற்றுத்திறனாளிகளுக்கு பணி மறுக்கப்படுவதை தடுத்து நிறுத்தி பணி வழங்கப்பட வேண்டும்.

40 சதவீத ஊனமுள்ள வேலை இல்லாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் சமூக பாதுகாப்புத்திட்ட உதவித்தொகை கொடுக்க வேண்டும் என்ற அரசாணையை உடனே அமல்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை, மற்ற பிரச்சினைகளை களைய சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் ராஜன், கிருஷ்டி, அறிவழகன், மாவட்ட துணைத்தலைவர்கள் சங்கலிமுத்து, கணேசன், சதாசிவம், மோகன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்