மொடக்குறிச்சி அருகே கோவில் நிலத்தை மீட்டுதரக்கோரி தாசில்தார் அலுவலகம் முற்றுகை

மொடக்குறிச்சி அருகே கோவில் நிலத்தை மீட்டு தரக்கோரி தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-12-04 21:30 GMT

மொடக்குறிச்சி,

மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூரில் பாசூர் செல்லும் சாலையில் பழமையான விநாயகர் கோயில் உள்ளது. இக்கோவிலின் முன்பகுதியில் அதேபகுதியை சேர்ந்த கதிர்வேல், பெரியசாமி ஆகியோருக்கு சொந்தமான மாவு அரைக்கும் மில் மற்றும் கறிக்கடை உள்ளது. கடைக்கு வருபவர்கள் மற்றும் கடைக்கு சொந்தமான வாகனங்களை கோவில் பகுதியில் நிறுத்திவிடுவதால் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதால், இதனை தடுக்க கோரி கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் பல்வேறு மனுக்கள் அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு கார்த்திகை தீபம் வைக்க கம்பம் நடுவதற்கு குழி தோண்டிய பொதுமக்களை தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மொடக்குறிச்சி தாசில்தார் மாசிலாமணியிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் தாசில்தார் தோண்டப்பட்ட குழியை மூட உடனடியாக கிராம நிர்வாக அலுவலக பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து எழுமாத்தூரை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 6 மணியளவில் ஒன்றுதிரண்டு சென்று, மொடக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அலுவலக வாயிலில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்து மொடக்குறிச்சி போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் போலீசாரிடம், கோவிலின் முன்பகுதியை கடைக்காரர்கள் பயன்படுத்த எந்த உரிமையும் இல்லை. அவர்களுக்கு கோவிலின் பக்கவாட்டுபகுதியில் செல்ல பாதை உள்ளது. அதில் செல்லாமல் கோவில் பகுதியை பயன்படுத்துவதுடன், கோவில் இடத்தையும் ஆக்கிரமித்து கொள்கிறார்கள். அவர்கள் கோவில் பகுதியை பயன்படுத்த அனுமதிக்ககூடாது என்றனர்.

இதுகுறித்து தாசில்தார் மாசிலாமணி கூறும்போது, ‘இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும் பழமை வாய்ந்த கோவில் என்பதால் கோவிலுக்கு பட்டா வழங்கவும், மின்வசதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை பொதுமக்கள் வேறு எந்த பிரச்சினையிலும் ஈடுபடாமல் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்‘. என்றார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்