சென்னை: கடத்தப்பட்ட 11 மாத ஆண் குழந்தை மீட்பு 2 பெண்கள் கைது

சென்னை பூங்கா நகர் பகுதியில் கடத்தப்பட்ட 11 மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டது, 2 பெண்களை கைது செய்தனர்.

Update: 2017-12-03 23:14 GMT

ராயபுரம்,

சென்னை சென்டிரல் பூங்கா நகர் மெமோரியல் ஹால் சாலையோரம் வசித்து வருபவர் ஆனந்த் (வயது 30). இவர், மீன்பாடி வண்டி ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி லதா (28). இவர்களுக்கு கிஷோர் (2), அகிலன் (11 மாதம்) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களுடன் ஆனந்தின் தந்தை நாகமுத்துவும் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் ஒரு துக்க நிகழ்ச்சியில் நடைபெற்ற கானா பாட்டு கச்சேரிக்கு இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் சென்றனர். பின்னர் இரவில் தாங்கள் வசிக்கும் இடத்துக்கு வந்து படுத்து தூங்கி விட்டனர்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் ஆனந்த் எழுந்து பார்த்தபோது அவர்களது 11 மாத கைக்குழந்தை அகிலனை காணாமல் திடுக்கிட்டார். மனைவி, தந்தையுடன் சேர்ந்து அருகில் பல இடங்களில் தேடிப்பார்த்தும் குழந்தையை காணவில்லை. யாரோ குழந்தையை கடத்திச்சென்று இருப்பது தெரிந்தது.

இதுபற்றி பூக்கடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட குழந்தை குறித்து பல இடங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் துணை கமி‌ஷனர் செல்வக்குமார் உத்தரவின் பேரில் உதவி கமி‌ஷனர் ரவி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தனிப்படை அமைத்து கடத்தப்பட்ட குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர்.

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், தனது ஆட்டோவில் வந்த 3 பெண்கள், கையில் ஒரு ஆண் குழந்தையை வைத்திருந்ததாகவும், அவர்களை அடையாறு பகுதியில் இறக்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து தனிப்படை போலீசார் அடையாறு பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் அந்த பெண்கள் குழந்தையுடன் கண்ணகி நகர் பகுதிக்கு பஸ்சில் சென்றது தெரிய வந்தது. பின்னர் கண்ணகி நகர் பகுதிக்கு சென்று அந்த பகுதி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த ஒரு வீட்டில் கடத்தப்பட்ட 11 மாத ஆண் குழந்தையுடன் 2 பெண்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்ட போலீசார், 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், கண்ணகி நகர் எழில்நகரை சேர்ந்த சபீயா (40), வனிதா (30) என்பதும், அவர்கள் குழந்தையை விற்பதற்காக கடத்தியதும் தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை பூக்கடை பகுதிக்கு அழைத்து வந்து மீட்கப்பட்ட குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் கைதான 2 பெண்களிடமும் ரகசிய இடத்தில் வைத்து குழந்தை கடத்தல் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது எப்படி? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

குழந்தை மாயமானது குறித்து அதன் தந்தை ஆனந்த், பூக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்த உடன், தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த பகுதி முழுவதும் விசாரணை நடத்திய போது ஆட்டோ டிரைவர் ஒருவர், ஒரு குழந்தையுடன் வந்த 3 பெண்களை ஆட்டோவில் அடையாறு பகுதியில் இறக்கிவிட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து அடையாறு பகுதிக்கு சென்று அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களிடம் விசாரித்த போது, அந்த பெண்கள் பஸ்சில் ஏறி சென்று விட்டதாக தெரிவித்தனர். இதனால் தனிப்படை போலீசார், அடையாறு பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து பஸ் கண்டக்டர்களிடமும் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அதில் அந்த பெண்கள், தடம் எண் 95 என்ற பஸ்சில் கண்ணகிநகர் சென்று எழில்நகர் பஸ் நிறுத்தத்தில் இறங்கியது தெரியவந்தது. எழில்நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், 3 பெண்கள் ஒரு குழந்தையை மறைத்து வைத்தபடி செல்வது தெரிந்தது.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் தீவிர சோதனை செய்த போது, குழந்தையை கடத்திய 2 பெண்களை பிடித்து விட்டோம். குழந்தை கடத்தப்பட்டதாக புகார் வந்த 10 மணி நேரத்தில் மீட்கப்பட்டு உள்ளது. விற்பனைக்காக அந்த குழந்தையை கடத்தியதாக தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு குழந்தை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என விசாரித்து வருகிறோம். இதேபோல் பூக்கடை பகுதியில் ஒரு குழந்தை கடத்தப்பட்டு சேலத்துக்கு சென்று மீட்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்