ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்படும் அபாயம்

வாடகை பாக்கி ரூ.6 லட்சத்து 91 ஆயிரம் செலுத்தாததால் தென்னக ரெயில்வேக்கு அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து மாமல்லபுரத்தில் ரெயில் டிக்கெட் முன்பதிவு பதிவு மையம் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2017-12-03 22:43 GMT

மாமல்லபுரம்,

மாமல்லபுரம் வரும் வெளிநாடு மற்றும் உள்நாடு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கடந்த 2003–ம் ஆண்டு ரெயில்வே இணை அமைச்சராக இருந்த ஏ.கே.மூர்த்தி ஏற்பாட்டில் மாமல்லபுரத்தில் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகிறது. மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளை திருமண மண்டப மேல் தளத்தில் முன்பதிவு மையம் செயல்பட்டு வருகிறது. மாத வாடகை, ஆண்டு ஒப்பந்தம், அடுத்தடுத்த ஆண்டுகளில் 11 சதவீத வாடகை உயர்வு என்ற அடிப்படையில் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் இயங்குகிறது.

தொடக்கத்தில் வாடகையை முறையாக செலுத்திய ரெயில்வே நிர்வாகம் சில ஆண்டுகளாக வாடகையை செலுத்தவில்லை என்றும், ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 1–7–2012 முதல் 30–6–2017 வரையான வாடகை பாக்கி ரூ.6 லட்சத்து 91 ஆயிரம் செலுத்தப்படவில்லை. நிலுவை தொகை செலுத்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க அறநிலையத்துறை பலமுறை வலியுறுத்தியும் தென்னக ரெயில்வே நிர்வாகம் அலட்சியப்படுத்தியதாக தெரிகிறது.

இதனால் இந்த மாதம் 31–ந்தேதி முதல் ரெயில் டிக்கெட் முன்பதிவு மைய கட்டிட வாடகை உரிமம் ரத்து செய்யப்படுவதாக அறநிலையத்துறை அறிவித்து முன்பதிவு மைய அறை கதவில் நோட்டீஸ் ஓட்டி உள்ளது.

இதையடுத்து வருகிற 31–ந்தேதி முதல் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி முன்பதிவு மையம் மூடப்பட்டால் சுற்றுலா பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.

மேலும் செய்திகள்