தஞ்சை மாவட்டத்தில் மழைக்கு 356 வீடுகள் சேதம், 40 கால்நடைகளும் இறந்தன

தஞ்சை மாவட்டத்தில் பெய்த தொடர் மழைக்கு 356 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும் 40 கால்நடைகளும் இறந்துள்ளன.

Update: 2017-12-03 20:30 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பின்னர் சில நாட்கள் மழை இன்றி கடும் குளிர் காணப்பட்டன. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் ஒகி புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்தது.

தஞ்சை மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. நேற்று முன்தினம் இரவு வரை மழை பெய்தது. நேற்று காலை முதல் மழை இன்றி வெயில் அடித்தது. அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன.

கடந்த அக்டோபர் மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்து கல்லணையில் இருந்து அக்டோபர் 5-ந்தேதி காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் திறந்து விடப்பட்டது. அவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி, குளங்களில் நிரப்பப்பட்டது.

தஞ்சையை அடுத்த சமுத்திரம் ஏரியிலும் தண்ணீர் விடப்பட்டது. இதனால் சமுத்திரம் ஏரி தண்ணீர் நிறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் பெய்த தொடர் மழை காரணமாக சமுத்திரம் ஏரிக்கு அதிக அளவில் தண்ணீர் வந்ததை தொடர்ந்து ஏரி நிரம்பியது.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், ஒரத்தநாடு, பாநாசம், திருவிடைமருதூர், திருவையாறு, பூதலூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 9 தாலுகாக்கள் உள்ளன. இந்த பகுதிகளில் வடகிழக்கு பருவமழைக்கு இதுவரை 304 வீடுகள் பகுதி சேதம் அடைந்துள்ளன. 52 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. மொத்தம் 356 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இது தவிர 16 ஆடுகள், 24 மாடுகள் என மொத்தம் 40 கால்நடைகள் இறந்துள்ளன. மேலும் மழைக்கு பேராவூரணியில் ஒருவர் இறந்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

தஞ்சாவூர் 9, வல்லம் 5, குருங்குளம் 6, திருவையாறு 29, பூதலூர் 3.6, திருக்காட்டுப்பள்ளி 6.2, கல்லணை 2.2, ஒரத்தநாடு 3.2, நெய்வாசல் தென்பாதி 17.2, வெட்டிக்காடு 2.8, கும்பகோணம் 89, பாபநாசம் 34.2, அய்யம்பேட்டை 53, திருவிடைமருதூர் 65.5, அணைக்கரை 45.8, மஞ்சளாறு 76.8, பட்டுக்கோட்டை 1, அதிராம்பட்டினம் 1.1, மதுக்கூர் 6.89.

மேலும் செய்திகள்