சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

குண்டும், குழியுமான சூரப்பட்டி சாலையை சீரமைக்கக்கோரி அந்த சாலையில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-03 00:00 GMT
காரையூர்,

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, காரையூர் அருகே மேலத்தானியத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந் நிலையில் மேலத்தானியத்தில் இருந்து சூரப்பட்டி செல்லும் தார்சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது சூரப்பட்டிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவ-மாணவிகள் கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது.

மேலும் பஸ் போக்குவரத்திற்கும் பயன்படாத நிலையில் இந்த சாலை உள்ளது. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று மேலத்தானியத்தில் இருந்து சூரப்படிக்கு செல்லும் சாலையில் நாற்றுகளை நட்டு நூதன போராட்டத்தில் ஈடு பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்களுக்கு உறுதியளித்தப்படி குண்டும், குழியமான, சாலையை உடனடியாக சரிசெய்யவிட்டால், பொதுமக்களை கூட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என கூறி விட்டு, அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்