மதகு அருகே கரை உடைந்தது: 50 ஏக்கர் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

கரூர் அருகே வாங்கல் வாய்க்கால் மதகு அருகே கரை உடைந்தது. இதில் 50 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கலெக்டர் கோவிந்தராஜ் பார்வையிட்டனர்.

Update: 2017-12-02 23:51 GMT

கரூர்,

வங்க கடலில் உருவான புயல் சின்னத்தால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில் கடந்த ஓரிரு நாட்களாக பரவலாக மழை பெய்தது. கடந்த 30–ந் தேதி, நேற்று முன்தினம் விட்டு, விட்டு மழை பெய்தது. நேற்று காலை மழை வெறித்தது. வெயில் சுட்டெரித்தது. மதியத்திற்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கரூரில் நேற்று பகலில் மழை பெய்யவில்லை. கடந்த ஓரிரு நாட்களாக பெய்த மழையினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் ஏரி, குளங்களின் நீர்மட்டம் அதிகரித்தது.

கரூர் அருகே வாங்கல் வாய்க்கால் உள்ளது. காவிரியிலிருந்து பிரியும் இந்த வாய்க்கால் மூலம் காவிரி கரையோரம் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலையில் மழையினாலும், பல்வேறு பகுதிகளில் பெய்த மழைநீர் இந்த வாய்க்காலில் கலந்ததாலும் வாய்க்காலில் நீர்வரத்து அதிகரித்தது.

நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக வாங்கலில் இருந்து நெரூர் செல்லும் வழியில் முண்டயனூர் என்ற இடத்தில் வாய்க்காலின் மதகு அருகில் கரை உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் கரையோரம் உள்ள வயல்வெளிகளில் பாய்ந்தது. இதனால் 50 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

கரை உடைப்பினால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் நேற்று விரைந்து வந்து உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட இடத்தையும், தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களையும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று பார்வையிட்டார். மேலும் அந்த பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களையும், சேதமடைந்த வீடுகளையும் அவர் பார்வையிட்டார். அப்போது அப்பகுதி பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் அவர் ஆறுதல் கூறினார். மேலும் வாய்க்கால் உடைப்பை முழுமையாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்