விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் நாசம்

கடமலைக்குண்டு அருகே விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் நாசமாயின.

Update: 2017-12-02 23:36 GMT

கடமலைக்குண்டு,

கடமலை–மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு அருகே ஈஸ்வரன்கோவில் பகுதியில் வைகை ஆற்றின் இருபுறத்திலும் விவசாய நிலங்கள் உள்ளன. வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரத்தில், அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுவது வாடிக்கையாகும்.

இதனை தடுக்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்வரன்கோவில் பகுதியில் நிலங்களுக்குள் தண்ணீர் புகாத வகையில் சில இடங்களில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. ஆனால் பெரும்பாலான பகுதியில் தடுப்புச்சுவர் கட்டப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக ஈஸ்வரன் கோவில் அருகே அமைந்துள்ள ஈஸ்வரன் என்பவரின் தோட்டத்துக்குள் தண்ணீர் புகுந்தது. அவர் 4 ஏக்கரில் பயிரிட்டிருந்த கத்தரி செடிகள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. இதேபோல் கரையோரத்தில் உள்ள விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமாயின.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது பயிர்கள் நாசமாகி விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். இதனால் ஆற்றங்கரை ஓரமாக தடுப்புச்சுவர்கள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் கரையோரத்தில் முழுமையாக தடுப்புச்சுவர் கட்டாததால் மீண்டும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, கரையோரத்தில் உள்ள தோட்டங்களுக்குள் தண்ணீர் புகாத வகையில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல மயிலாடும்பாறை கிராமத்தில், வைகை ஆற்றில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது. இதன் காரணமாக ஆற்றின் ஒரு பகுதி மேடாக மாறியது. எனவே வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்படும் நேரத்தில் கரையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு அருகே உள்ள தோட்டத்துக்குள் தண்ணீர் புகுந்தது.

இதேநிலை நீடித்தால் கரையோரத்தில் உள்ள விவசாய நிலங்கள், வைகை ஆற்றின் ஒரு பகுதியாக மாறி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வைகை ஆற்றில் மேடான பகுதியை சீரமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் விருப்பம் ஆகும்.


மேலும் செய்திகள்