அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா: மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின்முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் மகாதீபத்தை தரிசனம் செய்தனர்.

Update: 2017-12-02 23:26 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-வது நாள் மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம், நேற்று மாலை ஏற்றப்பட்டது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அண்ணாமலையாருக்கு தீபாராதனை செய்யப்பட்டதும் பரணி தீபம் ஏற்றுவதற்கான பூஜை தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து சரியாக அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றினர். பின்னர் அதில் இருந்து பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து பக்தர்களின் தரிசனத்திற்காக பரணிதீபம் வெளியே எடுத்து வரப்பட்டது. பரணி தீபத்தை பார்த்ததும் பக்தி பரவசத்துடன் ‘அண்ணாமலைக்கு அரோகரா’ என்று பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.

அதன்பின்னர் பக்தர்கள் வெளியேற்றப்பட்டு மாலையில் மகாதீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. பகல் 2 மணிக்குமேல் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மகாதீபத்தையொட்டி நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினர். இதனால் கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது.

அர்த்தநாரீஸ்வரர் காட்சியளித்து சென்றதும் சாமி சன்னதி முன்பு உள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் மலை உச்சியிலும் மகாதீபம் ஏற்றப்பட்டது.

மேலும் செய்திகள்