எடியூரப்பா முதல்–மந்திரியாக இருந்தபோது நடந்த ஆபரேசன் தாமரை’க்கு சித்தராமையாவும் உடந்தையாக இருந்தார்

எடியூரப்பா முதல்–மந்திரியாக இருந்தபோது நடந்த ‘ஆபரேசன் தாமரை‘க்கு சித்தராமையாவும் உடந்தையாக இருந்தார் என்று குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

Update: 2017-12-02 23:04 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

துமகூருவில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் சிறுபான்மையினர் மாநாடு வருகிற 10–ந் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறேன். ஜனதாதளம்(எஸ்) கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறி வருகிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சியின் பலம் தேர்தல் முடிவு வரும்போது சித்தராமையாவுக்கு தெரியும்.ஜனதாதளம்(எஸ்) ஆட்சிக்கு வந்தால் துணை முதல்–மந்திரி பதவியை தலித் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு கொடுப்பேன் என்று நான் கூறியது பற்றியும் சித்தராமையா பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் தலித் சமுதாயத்திற்கு எந்த ஒரு முக்கியத்துவத்தையும் சித்தராமையா கொடுக்கவில்லை. தலித் சமுதாயத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, பரமேஸ்வருக்கு முதல்–மந்திரி பதவி கிடைக்காமல் செய்ததே சித்தராமையா தான். அவர்களுக்கு அதிகாரத்தை கொடுக்காமல் ஓரங்கட்டினார். பா.ஜனதா ஆட்சியில் எடியூரப்பா முதல்–மந்திரியாக இருந்தபோது ‘ஆபரேசன் தாமரை‘ மூலம் பிற கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவுக்கு இழுத்தனர்.

அதன்படி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் பா.ஜனதாவில் இணைந்தனர். இதற்கு சித்தராமையாவும் உடந்தையாக இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் யாரையெல்லாம் சந்தித்து பேசினார் என்பதை மறந்து விட்டார். சித்தராமையா செய்த தவறுகளை காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மன்னித்ததால், அவர் முதல்–மந்திரியாகி இருக்கலாம். ஆனால் ‘ஆபரேசன் தாமரை’க்கு சித்தராமையாவும் உடந்தையாக இருந்தது பற்றி ஆதாரங்கள் உள்ளன. அந்த ஆதாரங்களை காங்கிரஸ் கட்சியினரே விரைவில் வெளியிடுவார்கள். நான் வெளியிட வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்