காஞ்சீபுரத்தில் 17 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் காஞ்சீபுரம் அருகே மாகரலை சுற்றியுள்ள 17 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

Update: 2017-12-02 22:37 GMT

காஞ்சீபுரம்,

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு அதிக அளவு தண்ணீர் வருவதால் அந்த அணையில் இருந்து சுமார் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரம்–உத்திரமேரூர் சாலையில் உள்ள மாகரல் வெங்கச்சேரி தரைப்பாலத்தையொட்டி தற்போது தண்ணீர் செல்கிறது. இதனால் தரைப்பாலத்தில் சில பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அபாய எச்சரிக்கை

இந்த நிலையில் சாத்தனூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு எந்த நேரத்திலும் 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆற்றில் வெள்ளத்தின் அளவு அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

எனவே மாகரலை சுற்றியுள்ள ஒழுகரை, சிலாம்பாக்கம், வெங்காரம், ஆதவப்பாக்கம், இருமரம், செங்குளம், அனுமந்தண்டலம், வெங்கச்சேரி, திருமுக்கூடல் உள்ளிட்ட 17 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இந்த பகுதிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மாகரலை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் இந்த பகுதி வழியாக காஞ்சீபுரத்திலிருந்து உத்திரமேரூக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் மாற்றுப்பாதையில் செல்ல உத்தரவிட்டார்.

அவருடன் எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர் (உத்திரமேரூர் தொகுதி), எழிலரசன் (காஞ்சீபுரம் தொகுதி) மற்றும் உத்திரமேரூர் தாசில்தார் ராஜம்மாள், கிராம நிர்வாக அதிகாரி ஜாஸ்மின் அன்சல்டா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்