வேலூர் அருகே ஐம்பொன் சிலை கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் கைது
வேலூர் அருகே ஐம்பொன் விநாயகர் சிலை கடத்தப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அடுக்கம்பாறை,
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே உள்ள சோழவரம் கிராமம் வடக்கு கொட்டாய்மேடு பகுதியில் பழமை வாய்ந்த செல்வவிநாயகர் கோவில் உள்ளது. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் ஐம்பொன் சிலையை கொள்ளையர்கள் கொள்ளையடித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அவர் தலைமையிலான வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் அறிவழகன் அடங்கிய குழுவினர் குடியாத்தம் அருகே உள்ள கல்லப்பாடி பகுதிக்கு சென்றனர். அங்கு சிலை கடத்திய குடியாத்தம் அருகே உள்ள கல்லப்பாடி பகுதியை சேர்ந்த விவசாய கூலிகளான திருலோகசுந்தர் (வயது 39), அன்பு (24) ஆகிய இருவரையும் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சோழவரம் கோவிலில் இருந்து திருடப்பட்ட முருகர், அம்மன், விநாயகர் ஆகிய 3 ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டது.
இதையடுத்து முனிராஜ் என்பவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும் கடத்தல் கும்பலில் பலர் ஈடுபட்டு வந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம், இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை பாகாயம் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து விசாரித்தனர்.
காரில் வந்த 3 பேர் மீதும் போலீசார் சந்தேகம் கொண்டனர். மேலும் அவர்கள் கூறிய பதில் முன்னுக்கு பின் முரணமாக இருந்தது. அதைத்தொடர்ந்து வேலூர் தாலுகா போலீஸ் நிலையம் கொண்டு சென்று போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தனர். அதில் அவர்கள் 3 பேரும் சோழவரம் கோவிலில் சிலை கடத்திய சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் குடியாத்தம் அருகே பூசாரிவலசை கிராமத்தை சேர்ந்த சசிகுமார் என்ற சத்யா (36), பாகாயம் பலவன்சாத்துகுப்பத்தை சேர்ந்த குமார் (25), ஒடுகத்தூர் பாக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சுதாகர் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.