நெல்லை மாவட்டத்தில் பலத்தமழை எதிரொலி: வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம் நிரம்பியது
நெல்லை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் எதிரொலியாக, வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம் நிரம்பி, கடல் போல் காட்சியளிக்கிறது.
இட்டமொழி,
நெல்லை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் எதிரொலியாக, வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம் நிரம்பி, கடல் போல் காட்சியளிக்கிறது. குளத்தின் கரைகளை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம்ஓகி புயலால் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குளங்கள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் மிகப்பெரிய குளமாக கருதப்படுவது நாங்குநேரி தாலுகா வடக்கு விஜயநாராயணம் பெரியகுளமாகும். இக்குளத்துக்கு பரப்பாடி வழியாக வரும் நம்பியாற்று காலிலும், மணிமுத்தாறு அணை தண்ணீர் வரக்கூடிய காலில் வரும் காட்டாற்று வெள்ளமும் வந்து கொண்டிருக்கிறது. இதனால் குளம் நிரம்பி தற்போது கடல் போல் காட்சி அளிக்கிறது. பெரியகுளம் நிரம்பியதையொட்டி பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விஜயநாராயணம் பெரியகுளம் நிரம்பினால் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா, நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா பகுதிகளில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் கூட வறட்சியான சமயத்தில் கூட நீர்மட்டம் இறங்காது. இந்த குளத்தில் எவ்வளவு நீரை சேமிக்கிறோமோ அந்த அளவுக்கு குளத்தின் கீழ் பகுதிகள் செழிப்பாக மாறும். ஆனால் பல ஆண்டுகளாக பெரியகுளத்தை தூர் வாராதால் குளத்தில் அதிக அளவு தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது. மேலும் குளத்தின் கரைகள் அனைத்தும் பலவீனமாக காணப்படுகிறது.
குளத்தின் கரையை பலப்படுத்த வேண்டும்பொதுமக்களும், விவசாயிகளும் சேர்ந்து குளத்தின் கரையை மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கி வைத்து பாதுகாத்துள்ளனர்.
இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் தர்மசாலா தலைவர் விஜயநாராயணசாமி கூறுகையில்,
விஜயநாராயணம் பெரியகுளத்தை ஒரு அணையாக கட்டுவதற்கு தமிழக அரசு திட்ட வரைவு தயாரித்துள்ளது. அந்த பணிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். வருடந்தோறும் பொதுமக்களும், விவசாயிகளும், ஊர்நல கமிட்டியினரும் இணைந்து செலவழித்துதான், குளத்தின் கரைகளை பாதுகாத்து வருகிறோம். குளத்தில் தண்ணீர் நிரம்பும் போது முன்னெச்சரிக்கையாக அரசு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயநாராயணம் குளத்துக்கு தண்ணீர் வரும் நம்பி ஆற்றுக்காலை அந்தந்த பகுதிகளில் பலர் ஆக்கிரமித்து வருவதால் கால் மிகவும் சுருங்கி விட்டது. மழை நேரத்தில் தண்ணீர் வரும் போது, காலில் வரும் தண்ணீர் விரயமாகிறது. இதனையும் சீர்படுத்த வேண்டும் என்றார்.