மீன்களிடம் ‘பேசும்’ மீன் வடிவ ரோபோ!

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம், மீன்களிடம் ‘பேசும்’ ரோபோவை உருவாக்கியுள்ளது.

Update: 2017-12-02 07:48 GMT
ஜெனீவாவில் இயங்கும் நிறுவனம் ஒன்று, பல்லாண்டு ஆராய்ச்சிக்குப் பின் மீன்களிடம் பேசும் இந்த ரோபோவை படைத்திருக்கிறது.

இது மிகவும் சிறியதாக, மீன் வடிவத்திலேயே உள்ளது. மீன்களை எளிதில் ஏமாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், சூரிய ஒளி சக்தியில் இயங்கும் நுண் எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இது மீன்களைப் போன்று நீந்தும் திறன் படைத்தது. மேலும், இதில் உள்ள டிரான்ஸ்மிட்டர், வெளியில் உள்ள மனிதர்களுக்கு தகவல்களை அனுப்பிக்கொண்டே இருக்கும்.

இந்த ‘ரோபோ’ கடலுக்குள் சென்று, நாம் தெரிவிக்கும் தகவல்களை மீன்களுக்கு புரியும்படி கூறும் திறன் படைத்தது என்றும், அதனால் மீன்களை அவற்றின் வழியில் இருந்து மாற்றவும், தேவையான இடங்களில் நிறைய மீன்களை ஒன்றாகச் சேர்க்கவும் முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த மீன் ரோபோ, கடல் சார்ந்த ஆராய்ச்சிகளில் பெரிய மைல்கல்லாக இருக்கும் என கருதப்படுகிறது.

விரைவிலேயே பயன்பாட்டுக்கு வரும் என்று கருதப்படும் இந்த ரோபோவை சுவிஸ் எல்.எஸ்.ஆர்.ஓ. நிறுவன விஞ்ஞானிகள் சுமார் 5 ஆண்டுகாலம் முயற்சி செய்து உருவாக்கியுள்ளனர்.

கடல் சார்ந்த ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்திவரும் அந்த நிறுவனம், மீன்களுக்கு நண்பனாக இருக்கும்வகையிலும், மனிதர்களுக்கு உதவும் வகையிலும் ஒரு ரோபோவை உருவாக்க முடிவு செய்து இதைத் தயாரித்துள்ளனர். இந்த ரோபோ மீனை கடலில் விட்டால், மீன் வலைகளுக்குத் தப்புமா எனத் தெரியவில்லை! 

மேலும் செய்திகள்