குடிநீர், கழிவறை வசதி இல்லாததால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
கிழக்கு தாம்பரம் பஸ் நிலையத்தில் குடிநீர், கழிவறை வசதி இல்லாததால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கிழக்கு தாம்பரம் தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி சாலை வழியாக மடிப்பாக்கம், வேளச்சேரி, தி.நகர், பிராட்வே, திருவான்மியூர், கேளம்பாக்கம், கோவளம் உள்ளி
தாம்பரம்,
கிழக்கு தாம்பரம் பஸ் நிலையத்தில் குடிநீர், கழிவறை வசதி இல்லாததால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி சாலை வழியாக மடிப்பாக்கம், வேளச்சேரி, தி.நகர், பிராட்வே, திருவான்மியூர், கேளம்பாக்கம், கோவளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் 130 மாநகர பஸ்கள் கிழக்கு தாம்பரம் ரெயில்வே மேம்பாலம் பகுதி மற்றும் கிறிஸ்தவ கல்லூரிக்கு எதிரில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.
தென் மாவட்டங்களில் இருந்து பஸ், ரெயிலில் தாம்பரம் வரும் பயணிகள், வேளச்சேரி வழியாக தங்கள் வீடுகளுக்கு செல்லவும் இந்த பஸ் நிலையத்தில் இருந்துதான் பஸ் ஏறி செல்கின்றனர். மாநகர பஸ்களை தவிர்த்து 100–க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்களும் இந்த பஸ் நிலையத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
சோழிங்கநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஏராளமான கம்ப்யூட்டர் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், வேளச்சேரி சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை, சோழிங்கநல்லூர் பகுதிகளில் உள்ள 10–க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் மற்றும் கலை கல்லூரி மாணவ–மாணவிகளும், பள்ளி மாணவ–மாணவிகளும் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பஸ் நிலையத்தில் கழிவறை வசதி இல்லை. தினமும் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள், வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் சிறுநீர் கழிக்க கூட வழி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
பஸ் நிலையத்தின் எந்த பகுதியிலும் கழிவறை இல்லாததால் பொதுமக்கள் மற்றும் பஸ் ஊழியர்கள் ரெயில்வே மேம்பாலம் பகுதியிலும், தண்டவாளம் ஓரத்திலும், சாலையோரங்களிலும் சிறுநீர் கழிக்கும் நிலை உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
பழைய ரெயில்வே கேட் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஒரே ஒரு தாற்காலிக கழிவறையை தாம்பரம் நகராட்சியினர் முறையாக பராமரிக்காததால் கழிவறை கோப்பைகள் உடைந்து விட்டது. மின் இணைப்பு மட்டும் உள்ளது. அதுவும் எந்த நேரத்திலும் மின்சாரம் தாக்கி பாதிப்பு ஏற்படும் நிலையில் சிதிலமடைந்து கிடக்கிறது.
கிழக்கு தாம்பரம் பஸ் நிலையம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியும் மாயமாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. இதனால் பயணிகள் குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர்.
தகவல் அறியும் உரிமை சட்டம்இந்த பஸ் நிலையத்தின் பராமரிப்பு பணிகள் குறித்து, கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹைதர் அலி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மாநகர போக்குவரத்து கழகத்தில் கேட்டதற்கு, ‘‘கிழக்கு தாம்பரம் பஸ் நிலையம் தங்கள் பராமரிப்பில் இல்லை’’ என தகவல் தெரிவித்து விட்டனர்.
இது குறித்து அவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தாம்பரம் நகராட்சி சார்பில் அவருக்கு பதில் அளிக்கப்பட்டது.
அதில், கிழக்கு தாம்பரத்தில் பஸ் நிழற்குடை மட்டுமே உள்ளது. நகராட்சி சார்பில் பஸ் நிலையம் ஏதும் பராமரிக்கப்படவில்லை. இந்த பஸ் நிழற்குடை உள்ள பகுதி மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது. சாலையை ஒட்டியுள்ள பகுதிகள் ஒரு பகுதி தென்னக ரெயில்வேக்கும், எதிர்பகுதி சென்னை கிறிஸ்தவ கல்லூரிக்கும் சொந்தமானதாகும். இந்த பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடம் இல்லாததால் கழிவறை வசதி செய்து தர வழிவகை இல்லாத சூழ்நிலை உள்ளது என தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:–
தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்லும் கிழக்கு தாம்பரம் பஸ் நிலையத்தில் கழிவறை வசதி அமைக்க நகராட்சிக்கு சொந்தமான இடம் இல்லை என்று கூறுகிறார்கள். அப்படியானால் தாம்பரம் மேற்கு பஸ் நிலைய பகுதியில் கழிவறை வசதி உள்ள இடங்கள் எல்லாம் நகராட்சிக்கு சொந்தமானதா?.
திறந்த வெளியில் மலம், ஜலம் கழிப்பதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தில் முழு வீச்சில் பணியாற்றி வரும் வேளையில், ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பஸ் நிலையத்துக்கு அடிப்படை வசதிகள் செய்ய அந்த பகுதியில் நகராட்சிக்கு இடம் இல்லை என கூறி தட்டிக்கழிப்பது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை.
தாம்பரம் நகராட்சிக்கு சொந்தமான தற்காலிக மொபைல் கழிவறைகள் பயன்படுத்தபடாமல் திருநீர்மலை சாலை சுடுகாடு பகுதியில் வீணாக கிடக்கிறது. இதுபோன்று தேவைப்படும் இடங்களில் அவற்றை வைக்கலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற தாம்பரம் நகராட்சி மாநில நெடுஞ்சாலை துறை மற்றும் தென்னக ரெயில்வே, மாநகர போக்குவரத்து கழகத்துடன் பேசி கிழக்கு தாம்பரம் பஸ் நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான கழிவறைகளை உடனடியாக அமைத்து கொடுக்கவேண்டும் என்பதே பயணிகள் மற்றும் தாம்பரம் பகுதி மக்களின் கோரிக்கை. தூய்மை இந்தியா திட்டத்திலாவது அரசு இதை நிறைவேற்றுமா? என பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.