திருப்பத்தூர் அருகே பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலைமறியல்

திருப்பத்தூர் அருகே வழி பிரச்சினைக்காக பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-01 22:00 GMT

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் தாலுகா கதிரிமங்கலம் கிராமம் நாசகவுண்டர் வட்டத்தில் 80–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கதிரிமங்கலத்தில் இருந்து தங்களது பகுதிக்கு செல்ல மண்சாலையை பயன்படுத்தி இவர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று செந்தில்குமார் என்பவர் பாதையை மறித்து, பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டினார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் செந்தில்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் பாதையை மறித்து ஏன் பள்ளம் தோண்டுகிறீர்கள் என கேட்டதற்கு, இந்த நிலம் எங்களுக்கு சொந்தமானது, நிலத்தை உழுது பயிர் செய்ய போகிறோம் என்றும், இந்த வழியாக இனி நீங்கள் வரக்கூடாது என கூறினர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து, திருப்பத்தூர் – புதுப்பேட்டை ரோட்டில் கதிரிமங்கலம் கூட்ரோடு என்ற இடத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய் துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், நாங்கள் 50 ஆண்டுகளாக இந்த பாதையை பயன்படுத்தி வருகிறோம், இது பொதுவழி தான், இதனை நாங்கள் பயன்படுத்த ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு வருவாய் துறையினர் நிலத்தை அளந்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சாலைமறியல் காரணமாக திருப்பத்தூர் – புதுப்பேட்டை ரோட்டில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து திருப்பத்தூர் சப்–கலெக்டர் கார்த்திகேயன் கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட இடம் யாருடையது என கோர்ட்டில் இருதரப்பினரும் வழக்கு போட்டு, அதன்பிறகு கோர்ட்டு தீர்ப்பின்படி நடந்து கொள்ளுங்கள் என கூறிவிட்டேன். இருதரப்பினரும் வேண்டுமென்றே இதுபோன்று தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள், தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் இருதரப்பினர் மீது வழக்கு போடப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்