ஜெயங்கொண்டத்தில் பாராமெடிக்கல், தையல் பயிற்சி மாணவிகளுக்கு இடையே மோதல்
ஜெயங்கொண்டத்தில் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் மற்றும் தையல்பயிற்சி பள்ளி மாணவிகள் மோதலில் ஈடுபட்டனர்.
வாரியங்காவல்,
ஜெயங்கொண்டத்தில் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் மற்றும் தையல்பயிற்சி பள்ளி மாணவிகள் மோதலில் ஈடுபட்டனர். மேலும் தாக்குதல் நடத்திய மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தா.பழூர் சாலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள கட்டிடம் ஒன்றில் இரண்டாவது தளத்தில் இரு பகுதியாக பிரித்து கே.எஸ்.பாராமெடிக்கல் கல்லூரியும், பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இப்பகுதியில் இருந்து 120 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு கல்லூரி நிர்வாகம் சார்பில் தையல் பயிற்சி வகுப்பும் நடத்தி வருகிறது. பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகளுக்கும், தையல் பயிற்சி படிக்கும் பெண்களுக்கும் இரண்டாம் தளத்தில் பொதுவான கழிவறை ஒன்று உள்ளது. இந்த கழிவறையை தையல் பயிற்சிக்கு வரும் பெண்கள் பயன்படுத்த கூடாது. மேலும் தையல்பயிற்சி பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற கோரி பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் பிரச்சினை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பாராமெடிக்கல் கல்லூரி முதல்வர் மெக்டலின் பூங்குழலி, கல்லூரி மாணவிகளுடன் தையல்பயிற்சி வகுப்புக்கு நுழைந்து தையல் பயிற்சிக்கு வந்த பெண்களை தாக்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் தையல்பயிற்சி பெற வந்த மாணவி சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மகள் ஆனந்தி (18), கீழகுடியிருப்பு ரமேஷ் மனைவி ராஜேஸ்வரி (30) ஆகியோரும், பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் நல்லனம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் சுமேதா (18), தேவமங்கலம் கிராமத்தை சேர்ந்த வரதராஜ் மகள் மேனகா (19), கல்லாத்தூர் பாண்டியன் மகள் சுசிலா(19) ஆகிய 5 பேர் காயமடைந்தனர். இதில் காயமடைந்தவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தங்களை தாக்க வந்த கல்லூரி மாணவிகள் மீதும், பாரா மெடிக்கல் கல்லூரி முதல்வர் மெக்டலின் பூங்குழலி மீதும் நடவடிக்கை எடுக்க கோரி வட்டாட்சியர் அலுவலகம் ஜெயங்கொண்டம்–தா.பழூர் சாலையில் தையல் பயிற்சி பள்ளியில் தையல் பழகும் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜீவ்காந்தி, முகமது நிசார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என கூறியதையடுத்து மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும் இந்த தனியார் கல்லூரிக்கு தமிழக அரசு அங்கீகாரம் இல்லாமல் இயங்குவதாகவும். அதனை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆய்வு மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மேலும் போதிய இடவசதி இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம் என்றும், இதுபோன்று தகராறு நடப்பது இது மூன்றாவது முறை என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.