திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக மழை: காங்கேயத்தில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன

திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்த மழை காரணமாக காங்கேயத்தில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன.

Update: 2017-12-01 22:15 GMT

காங்கேயம்,

ஒகி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மூலனூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. திருப்பூர், வெள்ளகோவில், குண்டடம், அவினாசி, ஊத்துக்குளி, பல்லடம் பகுதிகளில் நேற்று காலை முதல் இரவு வரை மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது.

காங்கேயம் பகுதியில் மழை காரணமாக தாராபுரம் ரோட்டில் உள்ள அண்ணாநகரில் கிட்டான்(வயது 61) என்பவரின் ஓட்டு வீடு, கமலம் என்பவரின் குடிசை வீட்டின் பக்கவாட்டு சுவரும் நேற்று காலை இடிந்து விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த காங்கேயம் தாசில்தார் மாணிக்கவேலு சம்பவ இடத்துக்கு சென்று இடிந்து விழுந்த வீடுகளை பார்வையிட்டார்.

பின்னர் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டானுக்கு ரூ.5 ஆயிரத்து 200–ம், கமலத்துக்கு ரூ.4 ஆயிரத்து 100–ம் நிவாரணமாக வழங்கப்பட்டன. மேலும் இவர்களின் குடும்பத்துக்கு 10 கிலோ அரிசி, வேட்டி–சேலை 2 லிட்டர் மண்ணெண்ணெயும் வழங்கப்பட்டது. திருப்பூரில் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ராயபுரம் பகுதியில் ரோட்டோரம் நின்ற ஒரு மரம் நேற்று முன்தினம் இரவு வேரோடு சரிந்தது. அந்த மரத்தை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 7 மணி வரை பதிவான மழை அளவு விவரம் வருமாறு:–

திருப்பூரில் 43.20 மில்லி மீட்டரும், அவினாசியில் 18 மில்லி மீட்டரும், பல்லடத்தில் 36.40 மில்லி மீட்டரும், காங்கேயத்தில் 43.60 மில்லி மீட்டரும், தாராபுரத்தில் 36 மில்லி மீட்டரும், மூலனூரில் 47 மில்லி மீட்டரும், உடுமலையில் 12.40 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

இந்த மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்