நெல்லை மாவட்டத்தில் கன மழை: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறுக்குத்துறை கோவிலை வெள்ளம் சூழ்ந்தது

நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்தது. அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் தாமிபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2017-12-01 21:30 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்தது. அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் தாமிபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

கனமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வந்த நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஓகி புயலாக உருவெடுத்தது. இந்த புயல் சின்னம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கடந்த 29–ந் தேதி இரவு முதல் பலத்த மழை பெய்தது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. பாபநாசம் அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

பாபநாசம் அணையில் இருந்து நேற்று 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதேபோன்று சேர்வலாறு அணைப்பகுதியில் இருந்து காட்டாற்று வெள்ளம் 10 ஆயிரம் கன அடியாக வெளியேறியது. இந்த தண்ணீர் ஆற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்து வந்ததால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாபநாசம் அகஸ்தியர் அருவி, தலையணை இருப்பதே தெரியாத வண்ணம் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மணிமுத்தாறு அணை பகுதியிலும் கனமழை பெய்ததால் அங்கிருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மணிமுத்தாறு அருவியே தெரியாத வகையில் வெள்ளம் பாய்ந்தோடியது.

தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு

நேற்று முன்தினம் கடனாநதி அணை நிரம்பி மறுகால் விழுந்தது. அணைக்கு வந்த 7 ஆயிரத்து 385 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. இதனால் கருணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் ராமநதி அணையும் நிரம்பியது. அணைக்கு வந்த 592 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. இதனால் கோதண்டராமநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளம் முக்கூடல் அருகே தாமிரபரணி ஆற்றில் சேர்ந்தது. அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மாதேவி பகுதியில் இருந்து காட்டாற்று வெள்ளமும் தாமிரபரணியில் சேர்ந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு வருவாய்த்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். வெள்ளத்தில் சேரன்மாதேவி கீழ் பாலம் மூழ்கியது.

குறுக்குத்துறை கோவில்

நெல்லை டவுன் கருப்பந்துறை தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆற்றில் அமலை செடிகள், முட்செடிகள் அடித்து வரப்பட்டு கருப்பந்துறை பாலத்தை அடைத்து நின்றது. இதனை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் அகற்றினார்கள். பாலத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் செல்வதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தாமிரபரணி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. கோவிலில் தெற்கு பகுதியில் உள்ள மண்டபம் வெள்ளத்தில் மூழ்கியது. இதுதவிர ஆற்றில் உள்ள தைப்பூச மண்டபம், தீர்த்தவாரி மண்டபங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளம் சூழ்ந்ததையடுத்து உற்சவ மூர்த்தியை மேலக்கோவிலுக்கு எடுத்து சென்றனர்.

கோவில்களை சூழ்ந்த வெள்ளம்

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம், கைலாசபுரம் பகுதியில் ஆற்றங்கரையில் உள்ள சுடலைமாடசாமி, கருப்பசாமி கோவில்களை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. ஒத்தப்பனை சுடலைமாடசாமி கோவில் சாமி சிலையை வெள்ளம் சூழ்ந்தது. நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை விநாயகர் கோவிலையும் வெள்ளம் சூழ்ந்தது.

நெல்லை, பாளையங்கோட்டை பகுதியில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், ஆற்றில் பிள்ளையைபோட்டு பலாப்பழம் எடுத்த ஓடையில் வந்து தாமிரபரணியில் கலந்தது. இதனால் தாமிரபரணியில் இன்னும் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

போக்குவரத்து நெருக்கடி

தாமிரபரணி ஆற்றில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்களிடையே திடீர் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடியேறினர். நெல்லை சுலோச்சன முதலியார் ஆற்றுபாலத்தில் இருந்து ஏராளமானவர்கள் தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தை பார்த்து ரசித்தனர்.

சிலர் தங்களது செல்போன் மூலம் செல்பி படம் எடுத்துக் கொண்டனர். இதனால் அந்த பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் 125 இடங்கள் அபாய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்