கர்நாடக தலைமை செயலாளராக ரத்னபிரபா பதவி ஏற்பு

கர்நாடக அரசின் புதிய தலைமை செயலாளராக ரத்னபிரபா பதவி ஏற்றார். மக்களின் குறைகளை தீர்க்க முன்னுரிமை அளிப்பேன் என்று கூறினார்.

Update: 2017-12-01 00:14 GMT

பெங்களூரு,

கர்நாடக தலைமை செயலாளராக பணியாற்றி வந்த சுபாஷ்சந்திர குந்தியா நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து மூத்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரத்னபிரபா புதிய தலைமை செயலாளராக நேற்று மாலை 4.30 மணிக்கு விதான சவுதாவில் பதவி ஏற்றார். அவருக்கு அரசுத்துறை முதன்மை செயலாளர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அதன் பிறகு ரத்னபிரபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

கர்நாடக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பேன். மக்களின் குறைகளை தீர்க்க முன்னுரிமை அளிப்பேன். அரசு என் மீது நம்பிக்கை வைத்து தலைமை செயலாளர் பதவியை வழங்கியுள்ளது. அரசின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி நான் பணியாற்றுவேன். கர்நாடகத்தில், பெலகாவி மாவட்டத்தில்தான் நான் முதல் முதலில் பணியை தொடங்கினேன்.

அதன் பிறகு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றினேன். பெங்களூருவில் பெண் தொழில்முனைவோருக்கு என்றே பொருளாதார மண்டலம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதால், மைசூரு, பல்லாரி, கலபுரகி, தார்வாரில் அத்தகைய பொருளாதார மண்டலம் தொடங்கப்படும்.

பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் இடையே நல்ல ஒருங்கிணைப்பான சூழல் உள்ளது. கருத்துவேறுபாடுகள் எழும்போது அதை நான் தீர்த்து வைப்பேன். நான் தலைமை செயலாளராக பதவி ஏற்கும் இந்த நேரத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இங்கு எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதற்காக அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ரத்னபிரபா கூறினார்.

புதிய தலைமை செயலாளர் ரத்னபிரபா அடுத்த ஆண்டு(2018) மார்ச் மாதம் பணி ஓய்வு பெறுகிறார். இன்னும் 4 மாதங்கள் மட்டுமே அவர் பதவியில் இருப்பார்.

மேலும் செய்திகள்