புதுவை துறைமுகத்தில் 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புதுவை துறைமுகத்தில் 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. புதுவையில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயல் சின்னமாக மாறியது. இதன் காரணமாக புதுவை துறைமுகத்தில் நேற்று முன்தினம் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
மேலும் வலுவடைந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்றும், வட மாவட்டங்களிலும், புதுவையிலும் பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் சின்னம் உருவாகியதை அடுத்து புதுவை துறைமுகத்தில் நேற்று மாலை 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.