ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளருக்கு ஆதரவு; தா.பாண்டியன் பேட்டி

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக திருச்சியில் தா.பாண்டியன் கூறினார்.

Update: 2017-11-30 22:45 GMT

திருச்சி,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் முப்பெரும் விழா உறையூரில் நேற்று நடந்தது. இதற்கு புறநகர் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் செல்வராஜ் வரவேற்றுப்பேசினார். சிறப்பு விருந்தினராக தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;–

சென்னை உயர்நீதி மன்றம் செவிலியர்களை அச்சுறுத்துவது போன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. செவிலியர்கள் மக்கள் நலனுக்காக பணிபுரிபவர்கள், அவர்கள் வேலை நிறுத்தம் செய்வது குற்றம் என்று கூறி உள்ளது. பல ஆண்டுகளாக செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தான் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களது சான்றிதழும் வாங்கி வைத்துக்கொள்ளப்படுகிறது. வெளி நாடு செல்ல அவர்களுக்கு வாய்ப்பு வரும்போது அனுமதி கிடைப்பது இல்லை. ஊதியமும் போதிய அளவு இல்லை. பணி நிரந்தரமும் இல்லை. 30 ஆண்டு காலம் பணிபுரிந்த பிறகு அவர்களுக்கு ஓய்வூதியமும் இல்லை.

தூய்மை பற்றி மத்திய, மாநில அரசுகள் பேசி வருகிறது. டெங்குவிற்கு காரணம் கொசுக்கள் தான். விண்ணில் ஏவுகணை அனுப்பும் இந்தியாவில், கொசுக்களை ஒழிக்க நேரடி வழி இல்லை. 100 வருடங்களாக ஒடுக்கப்பட்ட சமுதாயம் மட்டுமே துப்புரவு தொழிலில் ஈடுபட்டு வரும் நிலை இந்தியாவில் தான் உள்ளது. சென்னையில் துப்புரவு பணி செய்த போது ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க வில்லை. தற்கொலைக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. எனவே சுகாதார பணியாளர்களை குறிப்பிட்ட காலத்திற்குள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நீதி மன்றங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும். அதே போன்று நீதிமன்றங்களில் தமிழில் வாதாடி, தமிழில் நீதி வழங்கும் சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் ஆறுகளில் மணல் அள்ளப்பட்டு கூட்டுக்கொள்ளை நடந்து வருகிறது. நீர் வளம், இயற்கை வளம் கெட்டு போய் விட்டது. நதிகள் காணாமல் போய் விட்டது. மணல் குவாரிகளை மூடக் கோரி கோர்ட்டு 6 மாதம் கால அவகாசம் வழங்கி உள்ளதை ரத்து செய்ய வேண்டும். கட்டுமான பணிகளுக்கு பக்கத்தில் உள்ள நட்பு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். அதே போன்று இறக்குமதி செய்யப்படும் ஒரு பகுதி மணலை ஏற்கனவே சுரண்டப்பட்ட ஆறுகளில் கொட்ட வேண்டும்.

வடகிழக்கு பருவமழையால் வெள்ளப்பெருக்கு என்று கூறப்படுகிறது. ஆனால் 19 மாவட்டங்களில் இன்னும் குடிதண்ணீர் பிரச்சினை உள்ளது. கோவில்களில் உள்ள தெப்பக்குளங்களுக்கு நீர் செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டு விட்டன. எனவே தற்போது பெய்து வரும் மழை நீரை குழாய் மூலம் தெப்பக்குளங்களுக்கு சென்று அடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்