2 பேரை கொன்று அறுக்கப்பட்ட பனைமரத்துக்குள் புதைத்த வழக்கு: அண்ணன்–தம்பிக்கு இரட்டை ஆயுள்தண்டனை

2 பேரை கொன்று அறுக்கப்பட்ட பனைமரத்துக்குள் புதைத்த வழக்கில் அண்ணன்–தம்பிக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.

Update: 2017-11-30 22:45 GMT

சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த இருப்பாளிபுதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 45). கரும்பு வெட்டும் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் மணி (55). கூலி தொழிலாளி. கடந்த ஆண்டு (2016) ஜனவரி மாதம் 17–ந் தேதி காலை 7 மணிக்கு, அண்ணாதுரையும், மணியும் வெளியே சென்றனர். ஆனால் 2 பேரும் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், 2 பேரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர்களின் குடும்பத்தினர் பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த நல்லாகவுண்டரின் மகன்கள் அர்த்தனாரி (34), பழனிசாமி(37) ஆகிய இருவரும், ஜனவரி 17–ந் தேதி அண்ணாதுரை மற்றும் மணியை அங்குள்ள சுடுகாட்டிற்கு அழைத்துச்சென்று மதுவில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது தெரிய வந்தது.

மேலும் 2 பேரின் உடல்களை, குஞ்சப்பையன் என்பவரின் வரப்பில் அறுக்கப்பட்ட 2 பனைமரங்களின் வேர்பகுதியை துளையிட்டு புதைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பழனிசாமி, அவரது தம்பி அர்த்தனாரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த இரட்டைகொலை வழக்கில் தொடர்புடைய பழனிசாமி, அர்த்தனாரி ஆகியோர் மீதான விசாரணை சேலம் 3–வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் அவர்களுக்கு இரட்டை ஆயுள்தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் இருவரையும் கொன்று பிணத்தை அறுக்கப்பட்ட பனைமரத்தின் அடிப்பகுதிக்குள் புதைத்து மறைத்த குற்றத்திற்காக தலா 7 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்