கந்துவட்டிக்காக கிட்னியை விற்று தருமாறு மிரட்டுகறார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் புகார் மனு
ஈரோட்டில் கந்து வட்டிக்காக கிட்னியை விற்று தருமாறு மிரட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமாரிடம் ஒரு பெண் புகார் மனு கொடுத்தார்.
ஈரோடு,
ஈரோடு வெண்டிபாளையம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி பாரதி நேற்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமாரிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:–
நான் மருத்துவ செலவுக்காக எனது பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை கடனாக வாங்கினேன். அதற்கு அவர் வாரந்தோறும் வட்டி செலுத்த வேண்டும் என்று கூறினார். அதன்படி நானும் வாரந்தோறும் ரூ.13 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து வந்தேன்.
இதுவரை 11 வாரங்கள் தொடர்ந்து ரூ.13 ஆயிரத்தை கொடுத்து உள்ளேன். மேலும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவருக்கு நான் தினசரி வட்டியில் பணம் வாங்கி கொடுத்தேன். அவரும் முடிந்த வரை பணத்தை கட்டி உள்ளார். அதிகமான வட்டி கேட்பதால் எங்களால் பணத்தை கட்ட முடியவில்லை.
இந்தநிலையில் பணம் கொடுத்தவர் எனது வீட்டிற்கு வந்து மிரட்டுகிறார்கள். மேலும், கிட்னியை ரூ.10 லட்சத்துக்கு விற்று அதில் ரூ.5 லட்சத்தை கொடுத்து கடனை கழித்துவிடுமாறு கட்டாயப்படுத்துகிறார். எனவே கந்துவட்டி கேட்டு மிரட்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.