மனுநீதி நாள் முகாமில் கலந்து கொள்ள 54 அதிகாரிகளுடன் அரசு பஸ்சில் சென்ற கடலூர் கலெக்டர்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொழை கிராமத்தில் ஒரே நாளில் சிறப்பு கிராமசபை கூட்டம் மற்றும் மனுநீதிநாள் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொழை கிராமத்தில் ஒரே நாளில் சிறப்பு கிராமசபை கூட்டம் மற்றும் மனுநீதிநாள் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, கால்நடைத்துறை, வனத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 54 அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அரசு பஸ் ஒன்றும் அங்கு வந்து நின்றது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே மற்றும் அதிகாரிகள் பஸ்சில் ஏறினர்.
பின்னர் அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொழை கிராமத்தை சென்றடைந்தது. கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அரசு பஸ்சில் வந்து இறங்கியதை பார்த்த கிராம மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
இதுபற்றி கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கூறுகையில், ‘அரசு அதிகாரிகள் அனைவரும் பஸ்சில் செல்வதால் டீசல் செலவு மிச்சமாகும். மேலும், இதை பார்க்கும் பொதுமக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை ஏற்படும். ஏராளமான வாகனங்களில் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது’ என்றார்.