முதல்–அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவள்ளூரில் முதல்–அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்–அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
முதல்–அமைச்சர் கோப்பைக்காக மாவட்ட அளவிலான 2017–18–ம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் மாணவ–மாணவிகள் மற்றும் 21 வயதிற்குட்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான தடகளம், கூடைப்பந்து, கையுந்து பந்து, வளைகோல் பந்து, இறகுப்பந்து, மேசைப்பந்து போன்ற விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளது. கால்பந்து, கபடி போட்டிகளும் நடைபெற உள்ளது. நாளை(சனிக்கிழமை) நீச்சல் போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
1,050 வீரர்கள், வீராங்கனைகள்மாவட்ட அளவிலான முதல்–அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் 1,050 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். மாவட்ட அளவில் கலந்து கொண்டு தனி நபர் போட்டிகளில் முதலிடம் பெறுபவர்களும், குழு விளையாட்டு போட்டியில் தேர்வு செய்யப்படும் அணி மட்டுமே மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். முதல்–அமைச்சர் கோப்பைக்கான குழு மற்றும் தனிநபர் போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பெறும் அணி வீரர்கள், வீராங்கனைகளுக்கு தலா ரூ.1000, 750, 500 என பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த பரிசுத்தொகை நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மாவட்ட கலெக்டர், பெண்கள் பிரிவில் தடகளத்தையும், ஆண்கள் பிரிவில் கையுந்து பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா மற்றும் அரசு அலுவலர்கள்கலந்து கொண்டனர்.