பூந்தமல்லியில் பால் லாரியில் இருந்த ரூ.1½ லட்சம் திருட்டு

பூந்தமல்லியில் பால் லாரியில் இருந்த ரூ.1½ லட்சம் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-11-30 22:30 GMT

பூந்தமல்லி,

சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தை சேர்ந்த பரமசிவம்(வயது 33) என்பவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து நேற்று அதிகாலை லாரியில் பால் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்து வந்தார்.

இதற்காக அந்த கடைகளில் வசூலாகும் பணத்தை ஒரு சிறிய பெட்டியில் வைத்து, அதை டிரைவர் இருக்கைக்கு அருகில் வைத்து இருந்தார்.

பூந்தமல்லி எம்.ஜி. நகரில் உள்ள கடையில் பால் பாக்கெட்டுகளை இறக்கி விட்டு வந்து பார்த்தபோது, லாரியில் வைத்து இருந்த பணப்பெட்டி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது.

இதுபற்றி பூந்தமல்லி போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திய போலீசார், அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், அந்த பால் லாரியை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், சாலை ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி நிற்கின்றனர். பின்னர் பரமசிவம், லாரியை நிறுத்தி விட்டு பின்புறம் சென்று பால் பாக்கெட்டுகளை கடைகளில் இறக்கி வைக்கும் போது, ஒரு வாலிபர் மட்டும் நைசாக நடந்து சென்று லாரியில் இருந்த பணப்பெட்டியை திருடிவிட்டு வருகிறார். பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

மர்மநபர்கள் ரெயின் கோர்ட் மற்றும் தலையில் ஹெல்மட் அணிந்து உள்ளனர். இதுபற்றி பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான வாலிபர்களின் உருவம் மற்றும் அந்த மோட்டார் சைக்கிளின் பதிவெண்ணை வைத்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் பால் லாரி டிரைவர் பரமசிவத்துக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்