நெல்லை மாவட்டத்தில் பீடி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில் ரூ.1½ லட்சம் மானியம்

நெல்லை மாவட்டத்தில் பீடி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1½ லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Update: 2017-11-30 20:30 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் பீடி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1½ லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

ரூ.1½ லட்சம் மானியம்

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் நல அமைப்பில் பீடி, சினிமா மற்றும் சுரங்க தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசால் திருத்தி அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2017–18–ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த திருத்தி அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ், பயன் பெறுபவரின் மாத ஊதியம் ரூ.21 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பீடி, சினிமா மற்றும் சுரங்க தொழிலாளர்கள் தங்களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு மத்திய அரசு மானியமாக ரூ.1½ லட்சத்தை வழங்குகிறது.

விதிமுறைகள்

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தொழிலாளர்கள் பணியில் சேர்ந்து குறைந்தபட்சம் 1 ஆண்டு கடந்திருக்க வேண்டும். தொழிலாளர் நல அமைப்பில் பதிவு செய்திருக்க வேண்டும். தொழிலாளர்கள் தங்களுக்கென சொந்தமாக 60 சதுர மீட்டர் அளவு அதாவது தோராயமாக 650 சதுர அடி வீட்டு மனை வைத்திருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக பின் தங்கிய வகுப்பினருக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கும் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தளர்வு அளிக்கப்படும்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தொழிலாளர்களுக்கு (கணவன்–மனைவி) தங்களுக்கென சொந்தமாக வீடு இருத்தல் கூடாது.

தொழிலாளர்கள் தங்கள் பெயரிலோ அல்லது தங்களை சார்ந்தோர் பெயரிலோ, மத்திய அல்லது மாநில அரசிடம் இருந்து ஏற்கனவே வீடு கட்டுவதற்கு மானியம் பெற்றிருக்க கூடாது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெறும் தொழிலாளர்கள் வேறு எந்த மத்திய, மாநில அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழும் பயனாளியாக இருக்க கூடாது.

தொழிலாளர்கள் தங்களது சேமிப்பு வங்கி கணக்கு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்திருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தொழிலாளர்கள், தங்களது வீடுகளை 18 மாதங்களுக்குள் கட்டி முடிக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள், 2 படுக்கை அறைகள், ஒரு முகப்பு கூடம், ஒரு சமையல் அறை, ஒரு குளியல் அறை, ஒரு கழிப்பறை மற்றும் துணைகள் உலர வைப்பதற்கான ஒதுக்கிடம் ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விவரங்கள்

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு செயின்ட் தாமஸ் ரோட்டில் உள்ள தொழிலாளர் நல அமைப்பு, ஆணையர் அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்