விடுதியில் மாணவி தற்கொலை: பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

விடுதியில் மாணவி தற்கொலை: பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவியின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி

Update: 2017-11-23 23:00 GMT
சோழிங்கநல்லூர்,

பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தந்தை கண்ணீர் மல்க கூறினார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் துருவராஜரெட்டி. இவரது மகள் துருவராகமவுலிகா (வயது 18). இவர் செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்து வந்தார். நேற்றுமுன்தினம் பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்வின்போது காப்பி அடித்ததாக கூறி நிர்வாகத்தினரால் தேர்வு அறையில் இருந்து துருவராகமவுலிகா வெளியேற்றப்பட்டார்.

இதனால் மனவேதனை அடைந்த அவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த செம்மஞ்சேரி போலீசார் மவுலிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று காலை பிரேத பரிசோதனை முடிந்து மவுலிகாவின் உடல் அவரது தந்தை துருவராஜரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக மவுலிகாவின் தந்தை துருவராஜரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நேற்று முன்தினம் மாலை எனது மகன் ராக்கேஷ்ரெட்டி, எனது செல்போனுக்கு தொடர்பு கொண்டு கல்லூரியில் நடந்ததை கூறினான். நான் கல்லூரி நிர்வாகத்தினருக்கு தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, அவர்கள் எனக்கு எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. உடனே விமானம் மூலம் ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்தேன்.

பொதுவாக, காப்பி அடிப்பது என்பது ஒரு பெரிய தவறு இல்லை. அப்படியே எனது மகள் தவறு செய்திருந்தால், கல்லூரி நிர்வாகத்தினர் உடனே எனக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்திருக்கலாம். ஆனால் எனது மகளை தரக்குறைவாக பேசியுள்ளனர்.

இதனால் எனது மகள் தற்கொலை செய்துள்ளார். எனது மகளை நான் இழந்துவிட்டேன். இதேபோல், இந்த பல்கலைக்கழகத்தில் மற்றொரு சம்பவம் நடக்கக்கூடாது.

அதற்கு நிர்வாகத்தினர் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகள் இறந்தது எனது மனைவிக்கு கூட தெரியாது. மவுலிகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தான் இதுவரை நினைத்து கொண்டிருக்கிறார் என கண்ணீர் மல்க கூறினார். 

மேலும் செய்திகள்