கடந்த 4 ஆண்டுகளில் கர்நாடகத்தில் 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளோம் ஆர்.வி.தேஷ்பாண்டே பேச்சு

கடந்த 4 ஆண்டுகளில் கர்நாடகத்தில் 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளோம் என்று மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.

Update: 2017-11-23 20:58 GMT

பெங்களூரு,

கடந்த 4 ஆண்டுகளில் கர்நாடகத்தில் 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளோம் என்று மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.

கர்நாடகத்தில் முதலீடு

கர்நாடக அரசின் தொழில்துறை சார்பில் முதலீட்டாளர்கள் மாநாடு பெங்களூரு துமகூரு ரோட்டில் உள்ள சர்வதேச கண்காட்சி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டை தொழில்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே தொடங்கி வைத்து பேசியதாவது:–

முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது. முதலீடுகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி கொடுக்க கர்நாடக அரசு சிறப்பு நிதியை ஒதுக்கியுள்ளது. அதனால் முதலீட்டாளர்கள் தொடர்ந்து கர்நாடகத்தில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். 2013–ம் ஆண்டு முதல் இதுவரை சிறிய தொழில்கள் மூலம் 12.3 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

20 லட்சம் வேலை வாய்ப்புகள்

நடுத்தர தொழில் துறை மூலமாக 1.98 வேலை வாய்ப்புகளும், பெரிய தொழில்களில் 5.99 லட்சம் வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆகமொத்தம் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. வாகனங்கள், விமானத்துறை, பாதுகாப்பு பொறியியல் துறை தொடர்பான தொழில்களில் கர்நாடகம் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் கர்நாடக முக்கிய பங்கு ஆற்றுகிறது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் தரமான பொருட்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம். தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், ரோபோடெக், 3டி அச்சு, கண்காணிப்பு விமானங்கள், ராக்கெட் ஏவுகணை, போர் விமானங்கள் தயாரிப்பு, மின்னணு தொழில்நுட்பங்களை கர்நாடக அரசு முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறது. தொழில்துறையில் கர்நாடகத்தை பலமான மாநிலமாக மாற்ற நாங்கள் உழைத்து வருகிறோம்.

இவ்வாறு தேஷ்பாண்டே கூறினார்.

நுகர்வோர் சந்தை

சிறிய தொழில்துறை மந்திரி கீதா மகாதேவ பிரசாத் பேசுகையில், “2030–ம் ஆண்டுக்குள் கர்நாடகத்தில் 5–வது மிகப்பெரிய நுகர்வோர் சந்தை உருவாகும். தொழில்துறை வளர்ச்சியில் கர்நாடகம் வேகமாக வளர்ந்து வருகிறது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது“ என்றார்.

இந்த மாநாட்டில் மந்திரி ருத்ரப்பா லமானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்