இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது உடுப்பியில் இந்து மாநாடு யோகி ஆதித்யநாத், பாபா ராம்தேவ் பங்கேற்பு
உடுப்பியில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் இந்து மாநாடு நடக்கிறது. இதில் உத்தரபிரதேச முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத், யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
பெங்களூரு,
உடுப்பியில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் இந்து மாநாடு நடக்கிறது. இதில் உத்தரபிரதேச முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத், யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இந்து மாநாடுகர்நாடக மாநிலம் உடுப்பியில் நேற்று ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் மோகன் பகவத், பெஜாவர் மடாதிபதி விசுவேஸ்வர தீர்த்த சுவாமி, தர்மஸ்தலா தலைமை அதிகாரி வீரேந்திர ஹெக்டே ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–
உடுப்பியில் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் ‘தர்ம சான்சாட்’ என்ற பெயரில் மாபெரும் இந்து மாநாடு நடைபெற இருக்கிறது. நாளை(அதாவது இன்று) தொடங்கும் இந்த மாநாடு வருகிற 26–ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், வாழும் கலை அமைப்பு நிறுவனர் ரவிசங்கர், யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்வாழும் கலை அமைப்பின் நிறுவனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அயோத்தி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண முயன்று அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். தற்போது அப்பிரச்சினையில் சுமுக தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் இந்த மாநாட்டில் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மடாதிபதிகள், விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டில் சாதி பிரச்சினை, பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இந்துக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
அயோத்தியில் ராமர் கோவில்...இதுமட்டுமல்லாமல் முக்கியமாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்தும், பசு பாதுகாப்பு குறித்தும், தீண்டாமை ஒழிப்பு குறித்தும் பேசப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. சமூக சீர்திருத்தம், இந்து மதத்திற்கான பாதுகாப்பை பலப்படுத்துவது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.
இது அரசியல் மற்றும் அரசியல் கொள்கைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நடக்கும் மாநாடு ஆகும். அதனால் மாநாட்டில் அரசியல் பற்றி பேசப்படமாட்டாது.
26–ந் தேதி அறிவிக்கப்படும்மாநாட்டிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. மாநாட்டை துமகூரு சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சிவகுமார் மகாசுவாமி, ராமாபுரி மடாதிபதி வீரசோமேஸ்வரா ராஜதேசிகேந்திரா சிவாச்சார்யா சுவாமி ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். ஆதிசுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதி நிர்மலாநந்தநாத் சுவாமி மாநாட்டு மலரை வெளியிடுகிறார்.
மாநாட்டில் எடுக்கப்படும் முக்கிய தீர்மானங்கள் அனைத்தும் 26–ந் தேதி அறிவிக்கப்படும். மேலும் அன்று இந்து மக்கள் யாத்திரையும் நடைபெறும். மாநாட்டில் நிறைவு உரையை உத்தரபிரதேச முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் நிகழ்த்துவார். 1985–ம் ஆண்டுக்கு பிறகு 31 ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்போதுதான் உடுப்பியில் இந்து மாநாடு நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.