மணப்பாறை ஒன்றிய அலுவலகங்களில் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றிய அலுவலகங்களில் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-23 22:45 GMT
மணப்பாறை,

ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் கருவூலம் மூலம் வழங்கிடக் கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஊராட்சி செயலாளர்கள் தமிழகம் முழுவதும் நேற்று வேலை நிறுத்தம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் மணப்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தங்களின் கோரிக்கை குறித்து விளக்கி பேசினர். இந்த போராட்டத்தில் மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் வையம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி செயலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுமட்டுமின்றி மருங்காபுரி ஒன்றியத்திலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்களின் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. 

மேலும் செய்திகள்